யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பனையிலிருந்து தவறிவிழுந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
வட்டுக்கோட்டை தெற்கு முதலியகோவிலடியைச் சேர்ந்த அப்பன் என அழைக்கப்படும் நாற்பது வயது மதிக்கத்தக்க மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியைச் சேர்ந்த காசியன் தர்மலிங்கம் (அப்பன்) எனும் நபர் வட்டுக்கோட்டை மேற்கு புங்கங்குழி எனும் இடத்தில் கள் இறக்குவதற்காக பனையில் ஏறியுள்ளார்.
பனை உச்சியை அடைந்தபோது தன்னை பனையுடன் பிணைத்திருப்பதற்கான வடத்தினை பொருத்துவதற்கு மறந்துள்ளார். இதனால் வடம் பொருத்தப்பட்டுள்ளது என்ற நினைப்பில் அவதானமின்றி நின்றபோதே கீழே தவறி விழுந்துள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.