வடமாகாணத்தில் முதல் தடவையாகத் தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வுகள் இன்றும் நாளையும் யாழ். இந்துக் கல்லூரியில் பிரமாண்டமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறித்த விழாவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தமிழ்த் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழாவைக் குறிக்கும் வகையிலான அலங்கார வளைவுகள் யாழ். நகரம் மற்றும் விழா இடம்பெறும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதிகளில் நாட்டப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பங்கேற்கவுள்ள குறித்த விழா தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதனை அண்டிய பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ். குடாநாட்டில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.