“தன் வினை தன்னைச் சுடும்” – தன்னைத்தானே சுட்டுக் கொண்ட விமானம்

“தன் வினை தன்னைச் சுடும்” என்கிற விதி எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். அறிவியலை மையப்படுத்தி நடக்கிற அனைத்துக்கும் ஓர் எதிர் வினை இருந்துக் கொண்டே இருக்கும். சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்துகிற அறிவியல் திட்டங்கள் எல்லாமே தன்னுடைய தலையில் மண்ணைப் போட்டு கொள்கிற யானையின் செயலுக்கு ஒப்பானவைதான். துப்பாக்கியில் இருந்து ஒரு தோட்டாவை செலுத்த வேண்டுமானால் கூட அறிவியலை புரிந்துகொண்டு செயல்படுத்தியாக வேண்டும். இது, அறிவியலில் தன்னை தானே சுட்டுக் கொண்ட ஒரு விமானத்தின் கதை.

அறிவியல் விமானம்

சூப்பர்சோனிக் விமானம் ஒலியின் வேகத்தை விட வேகமாகப் பறக்க கூடிய ஒரு விமானம். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் சூப்பர்சோனிக் விமானங்கள்  உருவாக்கப்பட்டு, ஆராய்ச்சி மற்றும் இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. க்ரூமன்  F-11 டைகர் ஒரு சூப்பர்சோனிக் விமானம். ஒற்றை இருக்கை கேரியர் கொண்ட இந்த விமானம் யுனைடெட் ஸ்டேட்ஸ் கடற்படைக்குச் சொந்தமானது. 1954ஆம் ஆண்டு ஜூலை 30  ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. ஒலியை  விட அதிக வேகத்தில் பயணிக்க கூடிய இந்த விமானத்தின் வேகம் மணிக்கு 1170.

1956 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி F-11 டைகர் விமானம் நியூயார்க் லாங் தீவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகிறது. இதன் விமானி தாமஸ் W அட்ரிட்ஜ். விமானம் 20000 அடி உயரத்தில் பறக்கும் பொழுது விமான பீரங்கியில் (Colt Mk 12)இருந்து முதல் முறையாக 20 MM தோட்டாவைக் கடல் பகுதி நோக்கிச் சுடுகிறார். முதல் தோட்டா வெளியேறிய பிறகு விமானத்தின் கழுத்து பகுதிக்குக் கீழ் 20 டிகிரி கோணத்தில் பயணிக்கிறார். விமானம் 13000 அடிகளில் இருக்கும் பொழுது இரண்டாவது முறையாகக் கடலை நோக்கிச் சுடுகிறார். விமானம் தொடர்ந்து 7000 அடிகளை நோக்கிப் பயணிக்கிறது. இரண்டாவது தோட்டாவை செலுத்தி விட்டு 2.7 மைல்களை விமானம் கடந்த நொடி விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடிக்க,விமானம் கீழ் நோக்கிப் பாய்கிறது. விமானி சில காயங்களுடன் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுகிறார். உடனடியாக விபத்திற்கான காரணம் கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. ஏனெனில் 200  F-11 டைகர் விமானங்களை விமானப்படை பயன்பாட்டிற்கு வைத்திருக்கிறது.

அறிவியல்

விசாரணை அறிக்கை தனது முடிவுகளைத் தெரிவிக்கிறது. அறிவியல் முறையின் கோட்பாடுகள் விமான விபத்திற்குக் காரணம் எனக் கண்டறியப்படுகிறது. அதாவது 20000 அடியில் பயணிக்கும் பொழுது செலுத்தப்பட்ட முதல் தோட்டா நொடிக்கு 1500 அடிகளைக் கடக்கிறது. வானிலை மற்றும் காற்றின் வேகத்தால் தோட்டாவின் வேகம் குறைகிறது. அதே நேரம் விமானம் அதன் பாதையில் கீழ் நோக்கி 880 MPH வேகத்தில் பயணிக்கிறது. 2.7 மைல்  தூரத்தை கடக்கும் பொழுது விமானமும் தோட்டாவும் ஓரே முனையில் சந்திக்கின்றன. விமானத்தின் எஞ்சின் பகுதியை தோட்டா தாக்கியிருக்கிறது. விபத்திற்கு தோட்டாவின் வேகமும் விமானத்தின் வேகமும் முக்கிய காரணம் என கண்டறியப்படுகிறது. 1960 ஆண்டு  F-11 டைகர் கேரியர் ரக விமானங்கள் சேவையில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்படுகின்றன.

உயிர் பிழைத்த விமானி அட்ரிட்ஜ் விபத்து நடந்த ஆறு மாதங்கள் கழித்து  இப்படிச் சொல்கிறார். “ஒலியை விட அதிகமான வேகத்தில்  நாம் பயணிக்க ஆரம்பித்து விட்டோம். மனிதனின் அறிவியல் முன்னேற்றம் என்பது அபரிமிதமானது. அப்படி இருக்கையில் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பது சாத்தியம்”

City2