தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை என்று ஸ்ரீலங்காவின் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மேலும் மொழியினூடாக மக்களை கூறுபோட முனைபவர்கள் மனிதர்களே இல்லை என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த விடையத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,
“இந்த தமிழ் மொழியைப் பற்றி முக்கியமாக நான் கூற விரும்புகிறேன். நாம் ஆசியப்பகுதியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றும் தெரியும். மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் குடியேறினார்கள். அந்தக்காலத்தில் இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்விடங்களை அமைத்துக்கொண்டார்கள்.
தென்னிந்தியாவிலே வாழ்கின்ற மக்களின் முக்கிய மொழியாக தமிழ் மொழி உருவானது. தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட இரண்டு மொழிகள். உங்களுக்குத் தெரியும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள சம்மந்தங்கள் சடங்குகள் எல்லாம் ஆயிரத்து ஐநூறு வருடங்களையும் தாண்டி பின்னோக்கிச் செல்கின்றது.
மத ரீதியாக எங்களுக்குள் ஒரு நெருக்கம் இருக்கிறது. அதன்மூலமாக பெரிய கலாசாரத் தொடர்புகளும் இருக்கத்தான் செய்கிறது. உங்களுக்குத் தெரியும் இந்தியாவிலே பல மொழிகள் பேசப்படுகின்றன. முழு உலகத்தையும் எடுத்துப் பார்த்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. இந்தியாவை எடுத்துக்கொண்டால் எண்ணூறு மொழிகள் இருக்கின்றன. அதேபோன்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்கு பழகிய பல மொழிகள் அங்கே இருக்கின்றன. அதிலே ஒருமொழிதான் தமிழ் மொழி.
இன்னொரு மொழிதான் சிங்கள மொழி, இன்னொரு மொழிதான் பாளி மொழி, இன்னொரு மொழிதான் சமஸ்கிருதமொழி, அதேபோல் இன்னொரு மொழிதான் ஹிந்தி மொழி. இந்த மொழிகளுக்கிடையே மிகவும் நெருக்கம் இறுக்கம் சமாந்தரம் இருக்கிறது. சிங்கள தமிழ் மொழிகளைப் பார்த்தால் 20 வீதமான சொற்கள் நெருக்கமானவையாகத்தான் இருக்கின்றன. மொழி என்பது மக்களை வேறுபடுத்துவதோ கூறுபடுத்துவதோ அல்ல. மொழியென்பது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான ஒரு ஊடகம். மொழியென்பது மக்களை ஒன்றுபடுத்துவதற்கான பாலம். ஆனால் மொழி மூலமாக மக்களைப் பிரிக்கவேண்டும் என்று பலர் எண்ணுகிறார்கள. அது முற்றுமுழுதான தவறு. அது மக்களின் கொள்கையாக இருக்கமுடியாது. ஆகவே மொழிமூலமாக அனைவரும் சகோதரர்களாக மனிதர்களாக அனைவரும் சமூகம் ஏற்றுக்கொள்ளத்தக்கவகையில் வாழவேண்டும். எனவே எல்லா மொழிகளுக்கும் நாங்கள் கௌரவம் செலுத்தவேண்டும். முடியுமானால் எல்லா மொழிகளையும் நான் நன்றாகப் படிக்கவேண்டும். தமிழ் மொழியைப் படிக்கமுடியாதமைபற்றி நான் மிகவும் மனவருத்தப்படுகிறேன்.
பௌத்த இந்து தத்துவங்களுக்கிடையில் இடம்பெற்ற நெருக்கம் இறுக்கம் உங்களுக்கு தெரியும். இந்து தர்மத்தில் சொல்லப்படுகிறது விஷ்ணுவின் அவதாரத்தால்தான் புத்தர் உருவானார் என்று சொல்லப்பட்கிறது. பகவத்கீதையையும் பௌத்த போதனைகளையும் நாங்கள் நன்றாகப் படிக்கவேண்டும், ஆராயவேண்டும். கடந்தகாலங்களில் மொழிகளினூடாகவும் தத்துவங்களினூடாகவும் மக்களொன்றுபட்டார்கள்.
உங்களுக்கு இலங்கையின் சரித்திரம் பற்றியும் அனுராதபுர யுகத்தைப் பற்றியும் நன்றாகவே தெரியும். அதேபோல இந்த நாட்டில் பொலனறுவை யுகத்தைப் பற்றியும் தெரியும். இன்றைய காலத்தில் நாங்கள் தேசிய நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். சிங்கள தமிழ் முஸ்லிம் எனும் சகோதரத்துவ சொல்லப்பற்றிப் பேசக்கூடிய நட்புறவினைக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எல்லோரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்ற கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கு பல தடைகளைக் கொண்டுவருபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மனிதர்கள் அல்ல.
மனிதாபிமானமுள்ள அத்தனைபேரும் இந்த மொழிகளினூடாக ஒன்றிணைய முன்வரவேண்டும். நான் இந்த பொலனறுவை அனுராதபுர யுகங்கள் பற்றி ஏன் சொன்னேன் என்று இப்பொழுது சொல்கிறேன். தேசிய நல்லிணக்கத்தைப் பற்றிய நல்ல சிந்தனைகளைக் கொண்டிருந்த யுகம் தான் அந்த பொலனறுவையை ஆண்ட மகா பராக்கிரமபாகுவின் யுகம். பொலனறுவையில் பௌத்த விகாரைகள் பல இருக்கின்றன. அது பதினொராம் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளிலே கட்டப்பட்டது. மகா பராக்கிரமபாகு பல ஆண்டுகளாக இந்த நாட்டிலே ஆட்சிபுரிகின்றார். முழு நாடும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்த பொலனறுவையில் விகாரைகள் இருக்கின்ற அத்தனை இடங்களிலும் இந்துக் கோவில்கள் இருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியும். இன்று போனால்கூட உங்களுக்குத் தெரியும் பௌத்த விகாரைக்கு அண்மையில் ஒரு இந்துக் கோவில் இருக்கிறது.
அதேபோல சிங்கள மன்னர்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் இருந்து திருமணம் செய்துகொண்டார்கள். அதேபோல சிங்கள இளவரசிகள் இந்தியாவில் இருக்கக்கூடிய இளவரசர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். பராக்கிரமபாகுவின் காலத்திலே நாங்கள் மியன்மாரிலே ஒரு பகுதியைப் பிடித்து வைத்திருந்தோம். இந்த விவாகம் சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினையினால்தான் அந்த நாடு கைப்பற்றல் ஏற்பட்டது. மஹா பராக்கிரமபாகு காலத்தில் எங்கள் போதி மாதவனான கௌதம புத்தனின் புனித தந்தத்தினை இங்கே கொண்டுவந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து வேலையாட்கள் படை வந்ததென்று சொல்லப்படுகிறது. அதைவிட மிக முக்கியமான ஒரு விடயத்தினை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மூன்று நாட்களுக்கு முன்பதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் ஒரு அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தார். அதில் இந்துமக்கள் வசிக்கின்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருந்தாலும் அவர்களால் அவற்றிற்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படுத்தப்படாது என்று சொல்லப்பட்டிருந்தது.” என்று சனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டிருந்தார்.