கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமம் பெறாமல் வரிஏய்ப்பில் இயங்கிவந்த யுனிவர்சல் என்ற தனியார் பஸ் நிறுவனத்துக்கு சீல் வைத்து, அபராதத்துடன் தொகையை வசூலித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் காரைக்கால் நகராட்சி ஆணையர்.
காரைக்காலில் சுமார் 35 ஆம்னி பேருந்துகள், 4 ரூட் பேருந்துகள் மற்றும் 10க்கு மேற்பட்ட லாரிகள் இவற்றை இயக்கிவரும் பெரிய தனியார் நிறுவனம் யுனிவர்சல் ஆகும். அதிகாரிகளை மரியாதைக் குறைவாகப் பேசுதல், ஓட்டுநர், நடத்துநர்களின் லைசன்ஸைப் பிடுங்கி வைத்துக் கொண்டு மிரட்டுதல், உரிய ஊதியம் தராமல் இழுத்தடித்தல், பி.எப்., இன்சூரன்ஸ், ஈ.எஸ்.ஐ. போன்றவற்றில் முறைகேடு செய்தல், அரசு மற்றும் தனியார் பேருந்துகளிடம் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளுதல் – இப்படி பல குற்றச்சாட்டுகள் இந்த நிறுவனத்தின் மேல் அவ்வப்போது எழுவதுண்டு. உரிமையாளர்களின் செல்வாக்கால் அப்படியே அமுங்கிவிடுவதும் உண்டு.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமம் பெறாமலும், அரசுக்குரிய வரியை செலுத்தாமலும், இந்நிறுவனம் செயல்பட்டு வருவதை புதிய நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்ற சுதாகர் கண்டுபிடித்தார். உடனே, வருவாய் ஆய்வாளர்கள் பாலன், கந்தசாமி ஆகியோர் மூலம் நிறுவனத்தின் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கினார். இதற்கு எவ்விதப் பதிலும் வராததால் ஆணையர் சுதாகர், தாசில்தார் பொய்யாதமூர்த்தி தலைமையில் புறப்பட்ட அதிகாரிகள் குழு, யுனிவர்சல் நிறுவனத்தைப் பூட்டி சீல் வைத்தது. இதுவரை எந்த ஆணையரும் செய்யாத துணிச்சலான காரியத்தை சுதாகர் செய்ததால் நகரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி காரைக்கால் நகராட்சி ஆணையர் சுதாகரிடம் பேசியபோது, ”கடந்த 15 ஆண்டுகளாக தொழில் உரிமத்துக்கான நிலுவைத் தொகை, அதற்குண்டான அபராதத் தொகை ஆகியவற்றைச் சேர்த்து செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதற்கு உரிய பதில் வராததால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், ஏதேனும் தொகையில் குறைத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மறுத்தபோது, முழுத் தொகையும் இன்று செலுத்திவிட்டார்கள். சீல் அகற்றப்பட்டது. இதுபோல் அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.