மஹாராஷ்டிராவில் நான்கு பேரை கொன்ற இரண்டு வயதாகும் பெண் புலி ஒன்றை சுட்டுக் கொல்ல அம்மாநில வனத்துறை பிறப்பித்த உத்தரவை அம்மாநில உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி அந்தப் புலியைக் கொல்வதற்காக வனத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வன உயிர் செயல்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.
மஹாராஷ்டிராவில் உள்ள பிரம்மபுரி என்னும் நகரில் இரண்டு பேரைக் கொன்றதோடு நான்கு பேரைக் காயப்படுத்திய அந்தப் புலி கடந்த ஜூலை மாதம் பிடிக்கப்பட்டது.
பின்பு ‘போர் புலிகள் சரணாலயத்தில்’ விடப்பட்ட அந்தப் புலி, மேலும் இருவரை அடித்துக் கொன்றது.
புலியைக் கொள்வதற்கு வனத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த டாக்டர். ஜெர்ரில் பானைட், இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக பிபிசியிடம் கூறினார்.
அந்தப் பெண் புலியைப் பிடித்து, மயக்க மருந்து செலுத்தி அதை வேறு ஒரு வனப்பகுதியில் விட வேண்டும் என்று வன உயிர் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
வனத் துறை அதிகாரிகளால் கலா என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புலி, கடந்த ஜூலை 29-இல் போர் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்டது முதல் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான வனப்பரப்பில் நடமாடியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 60%-க்கும் அதிகமான புலிகளுக்கு தாயகமாக உள்ள இந்தியாவில், வாழ்விடங்கள் ஆக்கிரமிப்பு, சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அவைகளின் உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுவது உள்ளிட்ட காரணங்களால் அவ்விலங்குகள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
புலிகள் சரணாலயங்கள் இருக்கும் வனப்பகுதிகளில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகி வருவதால் வாழ்விடம் மற்றும் வளங்களுக்காக புலிகள் மனிதர்களுடன் போராட வேண்டியுள்ளது. இது மனித – விலங்கு மோதலுக்கு இட்டுச்செல்கிறது.
இந்தியாவில் புலிகளின் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015-இல் இந்தியாவில் 80 புலிகள் இறந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டு 78 புலிகளே இறந்துள்ளன.
பெரும்பாலான தாக்குதல்கள் எதிர்பாராத விதமாக புலிகள் மனிதர்களை எதிர்கொள்ளும்போது நடக்கின்றன. அத்தகைய சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர்களை புலிகள் இரையாக இழுத்துச் செல்கின்றன.
ஆனால், தொடர்ச்சியான சம்பவங்களில் அடுத்தடுத்து புலிகள் மனிதர்களைக் கொல்லும்போது அவை மனிதர்களை உண்பவையாகக் கூறப்படுகின்றன.