இந்தியா – பாகிஸ்தான் வாகா – அட்டாரி எல்லைப் பகுதியில், 360 அடி உயரமும் 40 அடி சுற்றளவும்கொண்ட கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அம்ரிஸ்தர் நகர மேம்பாட்டு நிர்வாகம், 3.50 கோடி ரூபாய் செலவில் இந்தக் கொடிக்கம்பத்தை நிறுவியது. 55 டன் எடைகொண்ட இந்தக் கம்பத்தில், பிரமாண்ட இந்திய தேசியக் கொடி பறந்துவந்தது. 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாகூர் நகரிலிருந்து பார்த்தால்கூட, வாகா எல்லையில் இந்திய தேசியக்கொடி பறப்பதைக் காண முடியும். இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. தினமும் மாலையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கே, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். நாட்டிலேயே உயரமான இந்தக் கொடிக்கம்பத்தில் இப்போதெல்லாம் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிடுவதில்லை. காற்றின் வேகத்தில் கொடி இரு முறை கிழிந்துவிட்டதைக் காரணமாகச் சொல்கிறார்கள். இதனால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில், மும்பையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் அஷ்மீதா பாட்டியா, தன் நண்பர்களுடன் அட்டாரி எல்லைப் பகுதியில் கொடி இறக்கும் நிகழ்ச்சியைக் காணச் சென்றுள்ளார். அங்கு வெறுமனே கம்பம் மட்டுமே இருந்துள்ளது. அந்த இடமும் களையிழந்து காணப்பட்டது. அதிர்ச்சியடைந்த அஷ்மீதா பாட்டியா, அங்கு இருந்த பாதுகாப்புப் படை வீரர்களிடம் விவரம் கேட்டுள்ளார். “கொடி, இருமுறை கிழிந்துவிட்டது. புதிய கொடி தயாரிக்கப்படவில்லை” என பதிலளித்துள்ளனர். அதே வேளையில் அருகில் இருந்த 400 அடி உயரம்கொண்ட கம்பத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடி கம்பீரமாகப் பறக்கிறது.
வேதனையடைந்த அஷ்மீதா பாட்டியா, “நாங்கள் கொடி இறக்கும் நிகழ்ச்சியைக் காண ஆசையுடன் வந்தோம். ஆனால், நீங்கள் மிகவும் அலட்சியமாக கொடி `கிழிந்துபோய்விட்டது’ எனப் பதில் சொல்கிறீர்கள். இதை சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று சண்டையிட்டுள்ளார். கொடிக் கம்பத்தை நிறுவிய அம்ரிஸ்தர் நகர நிர்வாகத்திடமும் சென்று புகார் அளித்தார்.
அம்ரிஸ்தர் நகர மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் மகாஜன் கூறுகையில், “360 அடி உயரத்தில் கொடி பறக்கும்போது காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கிழிந்துப்போய்விடுகிறது. அதனால், முக்கியமான தினங்களில மட்டுமே இப்போது கொடியேற்றுகிறோம். கடைசியாக ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றப்பட்டது” என்றார்.
எல்லை பாதுகாப்புப் படையினருக்கெனக் காலங்காலமாக தேசியக் கொடிகம்பம் ஒன்று உள்ளது. அதில்தான் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர் அவர்கள். இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர், உயரமான இந்தக் கொடிக்கம்பத்தை கண்டுக்கொள்வதில்லை.
“அம்ரிஸ்தர் நகர மேம்பாட்டு வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேசியக் கொடிக்கம்பத்துக்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. எந்த முடிவும் நகர நிர்வாகம்தான் எடுக்க வேண்டும்” என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். “பாகிஸ்தான் கொடி 400 அடி உயரத்தில் பறக்கிறதே” என்று கேட்டால், “அண்டை நாடு என்ன செய்கிறது என நாம் ஏன் பார்க்க வேண்டும்? கொடியைத் தரமானதாகவும், எப்படித் தயாரித்தால் கிழியாமல் இருக்கும் என்பது குறித்தும் அம்ரிஸ்தர் நகர நிர்வாகம்தான் யோசிக்க வேண்டும்” என்கின்றனர்.
இந்திய தேசியக்கொடி ஃபவுண்டேஷனின் தலைவர் ஷாநவாஸ் கான் கூறுகையில், “பொதுவாக 207 அடி உயரம் வரைதான் கொடி பறக்க ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும். அதற்கும் அதிகமான உயரத்தில் பறக்கும்போது, காற்றின் வேகம் கட்டுக்கடங்காமல் இருக்கும். 100 அடி உயரத்தில் கொடி பறந்தாலே காண்பதற்கு அழகாகவும் மனதுக்கு நிறைவைத் தரும்விதத்திலும் காட்சியளிக்கும். எனினும், 360 அடி உயரத்தில் கொடிக்கம்பம் எழுப்பப்பட்டு தேசியக்கொடி பறக்கவிடப்படாமல் இருப்பது வேதனை தரும் விஷயம்தான்” என்கிறார்.
வாகா பார்டரில் நம் தேசியக்கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும். இந்த விஷயத்திலும் பொறுப்பில்லாததுபோல உள்துறை அமைச்சகம் நடந்து கொள்ளக் கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.