இந்தியா மற்றும் இலங்கை இடையே மீனவர் பிரச்சனை தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை சனியன்று புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா சார்பில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும், இலங்கை சார்பில் கடல் தொழில் மற்றும் நீரியல் வள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவும் பங்கேற்றனர்.
இலங்கையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்பதற்கு இந்திய தரப்பு திருப்தி தெரிவித்ததுடன் இன்னும் இலங்கை சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களையும் அவர்களின் மீன் பிடி படகுகளையும் விடுவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இரு நாடுகளின் கடல் எல்லையில் அமைந்திருக்கும் பாக் நீரிணை பகுதியில் இழுவலை படகுகள் மூலம் மீன் பிடிப்பதைத் தடை செய்ய இந்தியத் தரப்பில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை பிரதிநிதிகளிடம் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இழுவலை படகுகள் மூலம் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்களை ஆழ் கடல் மன்பிடிப்புக்கு மாறச் செய்வது, மூக்கையூர் மற்றும் பூம்புகார் மீன்பிடி துறைமுகங்கள் அமைப்பது உள்ளிட்டவை இலங்கை தரப்பிடம் இந்திய பிரதிநிதிகளால் விளக்கப்பட்டன.
இலங்கை தரப்பில், சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுபவர்களைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.