ஊழலுக்கு நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் கமலும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். அவர்கள் இருவரும் தனியொரு அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் மராட்டியர் என்றும் கன்னடர் என்றும் பலர் அவரது அரசியல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் இயக்குநர் பாரதி ராஜாவும் ஒருவர்.
புதிய தலைமுறை தொலைகாட்சி சேனலில் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பாரதி ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தற்போதைய அதிமுக ஆட்சி குப்பை கூளம் போல் உள்ளது. இதில் சந்தேகமே இல்லை.
அந்த குப்பைகளை நான் சுத்தப்படுத்த முடியாது. அதற்கென சில அமைப்புகள் இருக்கிறது. அவை செய்யலாம். நான் வேண்டுமானாலும் குரல் கொடுக்கிறேன்.
அரசியலுக்கு வருவதற்கு தனிமனித ஒழுக்கமும், மக்கள் விசுவாசமும் தேவை. இவையெல்லாம் காமராஜர் காலத்தோடு முடிந்துவிட்டது. என் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். பாக்யராஜ், டி.ராஜேந்தர், ரஜினி, கமல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும்.
ஆனால் பாக்யராஜ், டி,ராஜேந்தரின் அரசியலை பார்த்துவிட்டேன். எனவே புதிய கமலையும் ,புதிய ரஜினியையும் களத்தில் பார்க்க எதிர்பார்க்கிறேன்.
ரஜினியும் கமலும் அரசியலுக்கு வந்தால் மாற்றம் வரும் என்று என்னால் இப்போது சொல்ல முடியாது. அவர்கள் களத்துக்கு வரட்டும் கலரை (நிறம்) கண்டுபிடிக்கிறேன். அரசியலுக்கு வந்தால் அதனுடைய பலாபலன்களை அவர்கள்தான் சந்திக்க வேண்டும்.
பொதுவெளியில் இருப்பவர்கள் ரஜினி-கமலால் மாற்றம் வரும் என்று கூறுவது வேறு. ஆனால் நான் ஆரூடம் சொல்லமாட்டேன். எனக்கு நண்பர்கள் என்ற முறையில் எதற்கு மாட்டுடன் சண்டை போடுகிறீர்கள் என கேட்பேன்.
ஆனால் மாட்டுடன் சண்டையிட்டு அவர்கள் ஜெயிக்கலாம். மாட்டுடன் சண்டையிட்டு ஜெயித்துவிட்டால் தர்மம் ஜெயித்துவிட்டது. இல்லாவிட்டால் கஷ்டம்தான்.
தமிழ் தாயின் பிள்ளை நான். ஆனால் ரஜினியும் கமலும் தமிழ் தாயின் வளர்ப்பு மகன்கள். என்னதான்வளர்ப்பு மகன்கள் இருந்தாலும் எனக்குதான் என் தாயின் மீது உரிமை அதிகம். எங்கள் வீட்டுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
நல்ல மனிதனாக நான் அவர் மீது அன்பு செலுத்துகிறேன். சாப்பிடலாம். உரையாடலாம். ஆனால் என் படுக்கையில் பங்கு கேட்காதீர்கள் என்றார் பாரதிராஜா.