வடக்கில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டுமென் றால் தெற்கில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்கவேண்டியது அவசியமாகும்.
இல்லாவிடின் வடக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படின் தெற்கிலும் அதேபோக்கு பின்பற்றப்படவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார்.
யுத்தகாலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அல்லது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தெற்கில் பல இராணுவ வீரர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில் புலிகளுடன் தொடர்பு பட்டுள்ளதாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு தரப்பிற்கும் நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி நேற்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் டிலான் பெரேரா மேலும் குறிப்பிடுகையில்:-
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கில் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதாக அறிகின்றோம். இங்கு ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டாகவேண்டும்.
அதாவது இராணுவ வீரர்களை கைது செய்து அவர்களை பழிவாங்குவதாக தெற்கில் இனவாதிகள் கூக்குரலிடுகின்றனர்.
அதேபோன்று வடக்கில் இளைஞர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்ற பெயரில் தடுத்துவைத்துள்ளதாக போராட்டம் நடத்தப்படுகின்றது.
இந்த இரண்டு நிலைமைகளையும் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ் பேசும் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பகிரப்படவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தும் தெற்கில் அரசியல்வாதியான நான் இந்த விவகாரத்திற்கு தீர்வாக ஒரு யோசனையை முன்வைக்கின்றேன்.
அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அநீதியான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கருது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களானால் பரவாயில்லை அதனை ஏற்றுக்கொள்வோம்.
ஆனால் அதேநேரம் தெற்கிலும் யுத்தகாலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு பல இராணுவ வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்களையும் இதே அனுகுமுறையைக் கொண்டு விடுவிக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம். காரணம் வடக்கில் அரசியல் கைதிகளை விடுவித்து விட்டு தெற்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களை விடுவிக்காவிடின் பாரிய பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
அதேபோன்று தெற்கில் உள்ளவர்களை விடுவித்துவிட்டு வடக்கு, அரசியல் கைதிகளை விடுவிக்காவிடினும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுவிடும் எனவே இந்த அனைத்து விடயங்களையும் உள்வாங்கி செயற்படவேண்டும்.
அந்தவகையில் வடக்கு அரசியல் கைதிகள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டால் தெற்கில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களையும் விடுவிக்கவேண்டும்.
இல்லாவிட்டால் இரண்டு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். வடக்கில் கைதிகளை விடுவித்துவிட்டு தெற்கில் விடுவிக்காவிடின் அது பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிடும்