வடகிழக்கில் 2 ஆயிரம் மில்லியன் ருபா நிதியில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் உட்பட வாழ்வாதார திட்டங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வடகிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக நேற்று (15.10) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்களை சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம், பொருளாதார அபிவிருத்திக்குழு மற்றும் வடகிழக்கு செயற்பாட்டுக் குழுவுடன் இணைந்து, 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறினார்.
யாழ். மாவட்டத்தில் 12 ஆயிரம் பேர் நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கின்றார்கள்.
நலன்புரி நிலையங்களில் 700 ற்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றார்கள்.
அதனால், இந்த பிரதேசத்தினை உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைக்குரிய இடமாக கருத்திற் கொண்டு, யாழ்.மாவட்டத்திற்கென 14 ஆயிரத்து 500 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
50 ஆயிரம் வீடுகளில் அதிகமான வீடுகள் யாழ்.மாவட்டத்திற்கும், வடகிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களிலும் இந்த கருத்திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டுத்திட்டங்களை வழங்குகின்ற போது, புள்ளி அடிப்படையில் தான் வழங்கப்படும். தெரிவு செய்யப்படுபவர்கள், உண்மையான தேவையுடையவர்களாகவும், நியாயப்பாடு உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
இடம்பெயர்ந்தோர்கள். மற்றும் இந்தியாவில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் உள்வாங்கப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முன்னாள் போராளிகள் குடும்பம், புள்ளிகளின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் வழங்கப்படும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கருதப்படுகின்றது. வடகிழக்கினைப் பொறுத்தவரையில் வீட்டுத் தேவை என்பது இன்றியமையாதது.
கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி உட்பட ஏனைய நலன் சார்ந்த திட்டங்களும் பிணைக்கப்பட்டுள்ள காரணத்தினால், ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் வரப்பிரசாத திட்டமென்றும், வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றிணைந்த கல்வீட்டுத்திட்டமாக அமையவுள்ளது.
எனவே, இந்த வீட்டுத்திட்டத்தினை விரைவான திட்டமாக முன்னெடுப்பதற்கு, பல அரச நிறுவனங்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள்.
இவ் வேலைத்திட்டங்களை துரித வேகத்தில் செய்ய வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.