“ஆருஷியின் ஆருயிர் தோழி பேசுகிறேன்..!”

ரட்டைக் கொலை சம்பவம் ஒன்றில் ஊடகமே விசாரணை தரப்பாகவும் நீதிமன்றமாகவும் அத்தனை அதிகாரங்களையும் கையில் எடுத்துக் கொண்டு செயல்பட முடியுமா?.  2008-ம் வருடம் உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்த இரட்டைக் கொலை வழக்குச் சம்பவம் குறித்த செய்திகள் அப்படித்தான் இருந்தன என்கிறார் ஆரூஷியின் தோழி. ஆருஷியின் கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவரது பெற்றோர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், மனம் திறந்தமடல் ஒன்றை அந்தத் தோழி எழுதியுள்ளார்.  fiza_jha_14067

14 வயதே நிரம்பியிருந்த ஆரூஷி தல்வார் மே 15, 2008 அன்று, தனது வீட்டுப் படுக்கையறையில் பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் பலமாகத்  தாக்கப்பட்டிருந்தார். கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த ஆருஷியின் உடலை அவளது பெற்றோர் கண்டெடுத்து காவல்துறைக்குத் தெரிவித்தனர். கொலைச் சம்பவம் நடந்த இரண்டாவது நாள் அவர்களது வீட்டுப் பணியாளரான 45 வயது ஹேம்ராஜ் பஞ்சாதே, அவரது வீட்டின் மொட்டைமாடியில் பிணமாகக் கிடந்தார். இந்த கொலைகளைச் செய்த தாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆரூஷியின் பெற்றோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரட்டைக் கொலைகளின் விசாரணையின் முடிவில், கடந்த அக்டோபர் 12-ம் தேதி, ஆருஷியின் பெற்றோர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார் ஆருஷியின் தோழி ஃபிசா ஜா. அந்த கடிதம் கீழ்கண்டவாறு பயணிக்கிறது…

“மக்களே,
நான் இந்த கடிதத்தை ஆருஷியின் உற்ற தோழியாகவும்.. பள்ளியில் அவளுடன் படித்த சக மாணவியாகவும், நொய்டாவில் வசிப்பவள் என்கிற முறையிலும் எழுதுகிறேன்.

ஆருஷி, இறப்பதற்கு ஒருநாள் முன்பு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். ஜலதோஷம் இருந்தபோதும் உற்சாகமாகத் துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தார். அவரது பிறந்தநாள் வர இருந்ததால் என்னுடன் வந்து தங்கியிருப்பதற்கும் நாங்கள் இருவரும் திட்டமிட்டிருந்தோம். இரவு தொலைபேசியில் என்னுடன் பேசிவிட்டு தூங்கச் சென்றவள் மறுநாள் பிணமாகத் படுக்கையில் கிடப்பதாக எனக்குத் தகவல் வந்தது.

இந்தச் சம்பவம் நடந்தபோது எனக்கு 14 வயது, இப்போது எனக்கு வயது 21, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெருநகரத்தில் தனியாக வசிக்கிறேன். அப்போதிலிருந்து இப்போதுவரை ஆருஷியின் கொலை விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதில் ஊடகங்கள், சிபிஐ மற்றும் சட்டம் இந்த மூன்றும் எந்த வகையில் செயலாற்றின என்பதைப் பற்றி நான் கூற வேண்டும்.

ஆருஷியின் பெற்றோர்

ஆருஷி கொலை செய்யப்பட்டு இரக்கமற்றுக் கழிந்த அந்த இரவு பலபேரால் மாற்றி மாற்றி எழுதப்பட்டு, தற்போது கொலை பற்றிய கதைதான்  உண்மை என்று நாம் எல்லோரும் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். நமக்குச் சொல்லப்பட்ட கதையில் எந்த விதமான ஆதாரத்தன்மை உடைய கேள்விகளையும் நாம் எழுப்பவில்லை.

ஆருஷியின் பெற்றோர்கள்தான் குற்றவாளிகள் என்றோ அல்லது குற்றமற்றவர்கள் என்றோ நம்புவதற்கு எனக்கு எவ்வித கட்டாயமும் இல்லை. அவர்கள் எனக்கு உறவினர்கள் இல்லை, ஏன்? குடும்ப நண்பர்கள் கூட இல்லை. ஆனால் ஆருஷி எனது நெருங்கிய தோழி, பள்ளியில் சந்தித்த முதல் சிநேகம். அதனாலேயே அவளது பெற்றோர்களையும் நம்பத் தோன்றுகிறது.

ஆனால் கொலைகளைக் கண்டறியத் சிநேகம் தேவை  இல்லையே! வலிமையான ஆதாரங்கள் அதற்குத் தேவையாக இருக்கிறது. ஆருஷியின் படுகொலைக்குப் பின்னர், மீடியாக்கள் பலவாறாக கதை வடிவங்கள் திரித்துக் கூறப்பட்டன.

ஆருஷியின் வீடு குற்றம் நடந்தது போல இல்லாமல், சர்வசாதாரணமாக ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து மக்களும் அங்கே உலவிக் கொண்டிருந்தார்கள். அங்கிருக்கும் அத்தனை பொருட்களின் மீதும் வந்து செல்பவர்களின் கைரேகை இருந்தது. ரத்தம் சுவற்றில் சிதறியிருந்த ஆரூஷியின் அறை கூட போலீஸாரால் பாதுகாக்கப்படவில்லை.

ஊடகங்கள் தங்கள் போக்கில் வெவ்வேறு வகையில் செய்திகள் என்கிற பெயரில் கதைகளை வெளியிடத் தொடங்கியிருந்தன. ஆருஷிக்கும் வீட்டுப் பணியாள் ஹேம்ராஜுக்கும் உறவு இருந்ததாக ஒரு செய்தி ஊடகம் எழுதியது. மற்றொரு ஊடகம் பெற்றோர்கள் எப்படி ஒழுக்கமில்லாமல் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதைப் பற்றி விவாதித்தது. ஆனால் இந்த ஊடகங்கள் எதையுமே அடிப்படை ஆதாரமில்லாமல் விவாதித்துக் கொண்டிருந்தன. இது அத்தனையும் என் ஆருயிர் ஆருஷி இறந்த ஓரிரு தினங்களில் நடக்கத் தொடங்கியிருந்தன.

ஒருவேளை ஊடகங்கள் தலையிடாமல் இருந்திருந்தால் இந்த வழக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசிக்கிறேன். சி.பி.ஐ இந்த விவகாரத்தில் உண்மையாகவே விசாரித்திருக்கும். காவல்துறை ஒருவேளை உண்மை குற்றவாளியைக் கண்டடைந்திருக்கும்.

ஒரு பிரபல செய்தித் தொலைக்காட்சியின் இரவு 9 மணி விவாதத்தில் ஆருஷியை பற்றி அந்த தொகுப்பாளரும் சிறப்பு அழைப்பாளரும் மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர்கள் இருவருக்குமே ஆரூஷியைப் பற்றி எனக்கு தெரிந்த அளவிற்கு கூடத் தெரியாது. தங்களது செய்தியில் சுவாரஸ்யம் தேவைப்பட்டதால் அவளுடைய நடத்தையை பற்றி காரசாரமாக அங்கே விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது.

உண்மையில் அவளது பெற்றொர்கள் பொருளாதார நிலையில் மேன்மை அடைந்த மருத்துவர்கள். அந்த வயதில் எங்கள் எல்லோருக்கும் ஆண் நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடன் நல்ல நட்பு இருந்தது. நல்ல நண்பர்களாக பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். பள்ளியில் அவ்வப்போது எங்களை இணைத்து வேடிக்கையாகப் பரிகாசம் செய்வார்கள். இவை எல்லாம் அந்த வயதுக்கேயான நிகழ்வுகளாக இருந்ததே ஒழிய எங்களுக்குள், இந்த செய்தியாளர்கள் கட்டமைத்தது போல பாலியல் ரீதியான தொடர்புகள் எதுவும் இருந்ததில்லை. என் தோழி ஆரூஷியைப் பொறுத்தவரை அவள் மிகவும் இயல்பானவள் எளிமையானவள் மனிதர்களை மதிக்கும் பண்பு அவளுக்கு இருந்தது. அதனாலேயே அவளுடன் எளிதாக எல்லோரும் நட்புறவு பாராட்டினார்கள். இது அத்தனை பற்றியும்தான் இட்டுக்கட்டி கதை கூறிக் கொண்டிருந்தார்கள் ஊடகவியலாளர்கள்.

ஒருவேளை அவளைப் போல அல்லாமல் இன்றும் வீட்டில் இருப்பவர்களுடன் பிடிவாதமாகச் சண்டையிட்டும் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் எனக்கு அந்த நிலை ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இப்படி விவாதிக்கப்படுவதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொண்டிருக்கமுடியாது. அதேபோலதான் நாம் ஆருஷிக்கு தகுந்த நியாயத்தை அளித்திருக்கிறோமா? என்கிற கேள்வியையும் எழுப்பத் தோன்றுகிறது. ஒரு சக மனிதராக உங்களுக்கும் அதே கேள்வியே எழுந்திருக்க வேண்டும்.

இப்படிக்கு,

ஃபிசா ஜா