சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என கேள்வி எழுப்பும் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் கருத்து கூறும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் அடைத்துள்ளதாக கூறுவது பொய்யான கருத்தாகும். இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் என யாரும் இல்லை. சிறையில் உள்ளவர்கள் விடுதலைப் புலிகள். அவர்களை எவ்வாறு அரசியல் கைதிகள் என சித்திரிக்க முடியும்.
ஆயுதம் ஏந்தி நாட்டில் பிரிவினையை ஏற்படுத்திய பயங்கரவாதிகள் எவ்வாறு அரசியலில் ஈடுபட முடியும்? ஆயுதம் ஏந்திய அரசியல் ஒன்று இலங்கையில் நடக்கவில்லை. இன்று சிறையில் உள்ளவர்கள் அனைவரும் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டிய நபர்கள். அவர்களை விடுதலை செய்யக் கூறி வடக்கில் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் புலிகளை விடுதலை செய்ய முடியாது. புலிகளை விடுதலை செய்வதனால் மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிக்கொடுக்க முடியாது. இன்று நாட்டில் அமைதியான சூழல் நிகழ்ந்து வருகின்றது.
நீண்டகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் நாட்டில் சகல மக்களும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடிகின்றது. ஆனால் இந்த யுத்தத்தை வைத்து அரசியல் நடத்தும் நபர்களுக்கு மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய தேவை ஒன்று உள்ளது.
தெற்கிலும் வடக்கிலும் ஒரு சிலர் நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த விரும்புகின்றனர். அதற்காக விடுதலைப் புலிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
எக்காரணம் கொண்டும் சிறையில் உள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது. அவர்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும். விடுதலைப் புலிகள் விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றார்.