ஆப்கன் தலைநகரான காபூலில், நடந்திருக்க வேண்டிய பெரிய வெடிகுண்டு தாக்குதலை தவிர்க்கும் வகையில், லாரி வெடிகுண்டு ஓட்டுநரை கைது செய்துள்ளதாக கூறுகிறது காவல்துறை.
அந்த லாரியில் சுமார் மூன்று டன் வெடி மருந்துகளும், தக்காளி பெட்டிகளுக்கு கீழே இரண்டு வெடிகுண்டுகளும் இருந்ததாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த வாகனத்தை அவர்கள் நிறுத்த முயன்ற போது, ஓட்டுநர் அந்த வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதாகவும். காவல்துறையினர் சுட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
கடந்த மே மாதம், இதே போன்ற ஒரு லாரி குண்டு வெடிப்பால் 150 பேர் காபூலில் இறந்தனர்.
அதிகாரிகள் துரிதநேரத்தில் செயல்பட்டதால், அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.
உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி நிறுவனம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் 30 டப்பாக்களில் வெடிமருந்துகளும், 100 கிலோ எடைகொண்ட இரண்டு குண்டுகளும் அந்த லாரியிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறியுள்ளது.
உரம் தயாரிக்க உதவும், அம்மோனியம் நைட்ரைட் அந்த டப்பாக்களில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த டப்பாக்கள், மின் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை புகைப்படங்கள் மூலம் பார்க்க முடிகிறது.
காயங்களுக்கு கட்டுகட்டியபடி, ஒருவர் ஊடகங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டார்.
மே 31ஆம் தேதி, ஒரு லாரி குண்டு வெடித்ததில், நகரில் இருந்த 150 பேர் இறந்ததோடு, 400 பேர் காயம் அடைந்தனர். அதில் பெரும்பான்மையானோர் பொதுமக்கள்.
2001 ஆம் ஆண்டு, தாலிபன் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஆஃப்கானிஸ்தானில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பாக அது கருதப்பட்டது.