ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதி கடைத்தெருவில் சாரதி பயிற்சி நிலையம் ஒன்றுக்குள் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடன் ஒருவன் சிசிரிவி கெமராவையும் பொருட்படுத்தாது கெமராவை அவதானித்தவாறே திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளமை பதிவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தில் பயிற்சி நிலையத்தின் அலுமாரிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு செல்பேசியும் 40 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக ஒருவர் ஏறாவூர் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் கேட்டுள்ளனர்.
கூரையைப் பிரித்து பயிற்சி நிலையத்துக்குள் உள் நுழைந்த திருடன், இலாவகமாகவும் பதற்றமின்றியும் அங்கிருந்த அலுமாரியை அமைதியான முறையில் துளாவி ஆராய்ந்து பணத்தையும் பொருட்களையும் தேடுவதும் அவ்வப்போது சிசிரிவி காணொளிக் கெமராவை நோட்டமிடுவதும் காணொளிக் கெமராவில் பதிவாகியுள்ளது.