இராணுவமா? கடற்படையா? பொலிஸாரா? விசாரணைகள் தீவிரம்!
ஸ்ரீலங்காவின் தலை நகர் கொழும்பில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் காது இராணுவத்தினன் ஒருவரால் கடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த ஏழாம் திகதி கொழும்பு 7இல் அமைந்துள்ள மலலசேகர மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தச் சம்பவத்துடன் பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் ஆகியோர் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கெதிரான விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சம்பவ தினத்தன்று இரவு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அண்மையில் இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும் கடற்படை அதிகாரிகளும் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் குடிபோதையில் ஆடிப் பாடிக் களித்துக்கொண்டிருந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட இடைஞ்சலைக் கருத்திற்கொண்ட சோதனைச் சாவடி பொறுப்பதிகாரி ஒருவர் குறித்த நிகழ்வை நிறுத்தச் சொல்லுமாறு இன்னொரு பொலிஸ் அதிகாரியிடம் சொல்லி அனுப்பியுள்ளார். அதன்படி குறித்த பொலிஸ் அதிகாரி அங்கே சென்று கூறியபோது சிறிது தர்க்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அன்றிரவு அவர் தனது அறையில் இருந்தபோது அங்கே பிரசன்னமாகிய நபர் ஒருவர் அவரை கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளதுடன் குறித்த பொலிஸ் அதிகாரியின் காதையும் கடித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி தற்பொழுது நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்த தீவிர விசாரனைகளே தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது.