இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு-சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு-சந்தேக நபர்களின் விளக்க மறியல் நீடிப்பு

யாழ். நீதவான் எஸ்.சதீஸ்தரன் முன்னிலையில் இன்று குறித்த சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே குறித்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

மேலும், குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது சட்டத்தரணிகளும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே கடந்த ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், இருதரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி நல்லூர் பின் வீதியில் நீதிபதி மா.இளஞ்செழியன் காரில் சென்றுகொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்திருந்தார்.

இதில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது