புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில், இடைக்கால அறிக்கைக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பௌத்த குருமாருக்கும் அந்த அறிக்கையின் எதிர்விளைவுகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்றும் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர்களை அம்பாந்தோட்டையில் சந்தித்து உரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடைக்கால அறிக்கை பிரிவினைக்கு வழி வகுக்கும் எனவும் அது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
அதேவேளை விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, இடைக்கால அறிக்கைக்கு எதிராக சுவரொட்டி போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழரசுக் கட்சி இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதால் அதில் பிரிவினை இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணி கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, திஸ்ஸ விதாரண ஆகியோர் உட்பட கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்துள்ள சிறிய இடதுசாரிக் கட்சிகளும் இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இதனால் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரச்சாரங்களில் இடைக்கால அறிக்கைக்கு எதிரான பிரச்சாரங்கள் சூடுபிடிக்கும் என கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதேவேளை இடைக்கால அறிக்கை மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் சமீபகால செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கொழும்பில் கூடிப் பேசவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் கூறியுள்ளார்.