இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்: 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி..!!

பாகிஸ்தான் – இலங்கை இடையே கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 2 டெஸ்ட் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

srilanka-vs-pakistan

5 ஒரு நாள் போட்டி தொடரில் துபாயில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 83 ரன்னில் வெற்றி பெற்றது. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பக்கர் ஜமான் 11 ரன்களிலும், அஹமது ஷெசாத் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து பாபர் அசாமும் முகமது ஹபீசும் களமிறங்கினர். ஹபீஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அசாம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சோயப் மாலிக் 11 ரன்களிலும், சர்பராஸ் அகமது 5 ரன்களிலும், இமாத் வாசிம் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 27.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. இதையடுத்து அசாமுடன், ஷபாத் கான் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். சிறப்பாக விளையாடிய அசாம் சதம் அடித்தார். அவர் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஹசன் அலி 7 ரன்களிலும், ருமன் ரயிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷபாத் கான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் லஹிரூ கமகே 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 220 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிரோஷன் டிக்வெல்லாவும், உபுல் தரங்காவும் களமிறங்கினர். பாகிஸ்தான் அணியினரின் பந்துவிச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிக்வெல்ல்லா (3), குசல் மெண்டிஸ் (10), லஹிரூ திரிமன்னே (12), தினேஷ் சந்திமல் (2), மிலிந்தா சிரிவர்தனா (3), திசாரா பெரேரா (7), அகிலா தனஞ்ஜெயா (1) ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 28.1 ஓவரில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இருப்பினும் இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா நிலைத்துநின்று ஆடினார். அவருடன் ஜெஃப்ரி வண்டர்சே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மிட்க போராடினார். தரங்கா அரைசதம் அடித்தார். வண்டர்சே 55 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சுரங்கா லக்மல் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுடாகி வெளியேறினார். இதனால் இலங்கை அணி 172 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்தது.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய தரங்கா சதம் அடித்தார். அவர் அணியை வெற்றி பெற செய்ய தனி ஆளாக போராடினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாததால் இலங்கை அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தரங்கா 112 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

52 ரன்கள் எடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தானின் ஷபாத் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி அபுதாபியில் வருகிற 18-ம் தேதி நடக்க உள்ளது.