புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும், மூன்று வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வித்தியா படுகொலை வழக்கில் சிறப்பு தீர்ப்பாயத்தினால் கடந்த மாதம் 27ஆம் நாள் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உடனடியாக, போகம்பர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ஒரே சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஏழு குற்றவாளிகளும், பாதுகாப்புக் காரணங்களுக்காக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.
இவர்களில் இருவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும், இருவர் மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேர் தொடர்ந்தும், போகம்பர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே குற்றத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் ஒரே இடத்தில் சிறை வைத்திருப்பதில் உள்ள பாதுகாப்பு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாற்றங்கள் குற்றவாளிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.