இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர்.
சிரியா ஜனநாயக படையான, எஸ்.டி.எஃப், அல்-நயிம் சதுக்கத்தை மீட்டுள்ளதாக கூறியுள்ளது. அங்குதான் ஐ.எஸ் அமைப்பினர் பொது மரணதண்டனை அளிப்பார்கள்.
அந்த நகர் மீட்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இதற்கு முன்பாக, உள்ளூர் ஐ.எஸ் போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், திட்டமிட்டிருந்தது போலவே இந்த நகரைவிட்டு சென்றனர்.
எந்த வெளிநாட்டு வீரர்களும் அவர்களோடு இணைவதற்கு அனுமதியில்லை என்று எஸ்.டி.எஃப் கூறுகிறது.
உள்ளூர் படையினர், இதுவரை மூன்று ஆயிரம் பொதுமக்கள் இந்த நகரைவிட்டு தப்பியுள்ளதாக கூறுகின்றனர்.
2014 ஆம் ஆண்டில், ஐ.எஸ் அமைப்பால் கைப்பற்றப்பட்ட பெரிய நகரங்களில் முதன்மையானது ரக்கா நகரம். இது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
குர்திஷ் மற்றும் அரபு வீர்ர்களின் குழுவான எஸ்.டி.ஃப் , கடந்த நான்கு மாதங்களாக இந்த நகரை முற்றுகையிட்டு வந்தது.
திங்களன்று, பிபிசியிடம் பேசிய எஸ்.டி.ஃப் குழு, நகரில் உள்ள அரங்கிலும், மருத்துவமனையிலும் சுமார் 50 ஐ.எஸ் படையினர் மீதமுள்ளதாக கூறினார்கள்.
திங்களன்று, ரக்கா நகரத்தினுள் பிபிசியால் நுழைய முடிந்தது. பல மாதங்களில், முதல்முறையாக, அங்கு ஒரு வான்வழி தாக்குதல், துப்பாக்கிச்சூடு கூட இல்லை என்கிறார் பிபிசி செய்தியாளர் குவெண்டின் சோமர்வில்.
எஸ்.டி.ஃப் வாகனங்கள், அழிக்கப்பட்ட இந்த நகர வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டதோடு, மக்களை வெளியே வந்து சூடான உணவை சாப்பிடுமாறு ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தது என்கிறார் நமது செய்தியாளர்.
ஒரு சில போராளிகளை நகரைவிட்டு வெளியேற்றி, இங்கு முழுமனதாக சண்டையிடும் குழுவை மட்டும் விட்டுவிட்டு செல்லும் வகையில், ஐ.எஸ் அமைப்பை அனுமதித்தது என்பது, சண்டையை குறுகியதாக்குவதற்கே என்கிறது எஸ்.டி.ஃப்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரியா மற்றும் இராக்கில் தொடர்ந்து தோற்றுவரும் ஐ.எஸ் அமைப்பிற்கு, ரக்கா வீழ்ச்சியும் ஒரு தோல்வியாகவே இருக்கும்.
ஐ.எஸ் அமைப்பு தனது தீவிரமான இஸ்லாமிய சட்ட விளக்கங்கள், தலையை துண்டித்தல், சிலுவையில் அறைதல் மற்றும் தங்களின் ஆட்சியை எதிர்க்கும் மக்களை சித்ரவதை செய்தல் உள்ளிட்ட விஷயங்களின் மூலம், உலகளவில் பல வீரர்களை ஈர்த்தது.