பால் பாக்கெட்டுகளுக்கிடையே மறைத்துக் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்!

ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், பால் பாக்கெட்டுகள் அடுக்கிவைக்கப்படும் பிளாஸ்டிக் டப்பாக்களில் மறைத்து எடுத்துச்சென்ற 150 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.  அவற்றை மினி சரக்கு வேனில் எடுத்துவந்த இருவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர்.
IMG-20171016-WA0095_08528ராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில், மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரைக்கு  கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸார் அப்பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த மினி சரக்கு வேனை நிறுத்தி  சோதனையிட்டபோது, அதில் பால் பாக்கெட்டுகள்  பிளாஸ்டிக் டப்பாக்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பால் பாக்கெட்டுகளை அகற்றிவிட்டுப் பார்த்தபோது, அதில் நான்கு வகையான 150 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பாட்டிலின் விலை ரூ.80 ஆகும்.  அவற்றை போலீஸார் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது, வாகனத்தை ஓட்டி வந்தவரும், மற்றொரு நபரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். பின்னர், 150 மதுபாட்டில்களையும்,  அவற்றைக் கடத்துவதற்குப் பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் தப்பி ஓடிய இருவரும், ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் ராஜேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இருவர் மீதும் ராமநாதபுரம் மதுவிலக்குப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து  இருவரையும் தேடி வருகின்றனர்.
இதேபோல, பாம்பனிலிருந்து சுமார் 90 மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்பதற்காக, மொத்தமாக வாங்கிச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சண்முகம், செந்தூர்பாண்டி ஆகிய இருவரையும் பாம்பன் காவல் சார்பு ஆய்வாளர் குகலேந்திரன் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.