கோவையில், புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கினர்.
நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக மதுக்கடைகளைத் திறக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியது. ஆனால், இதற்குப் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிதாக திறக்கப்பட்ட பல்வேறு மதுக்கடைகளை, பெண்கள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் அடித்து நொறுக்கி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம், பேரூர் செட்டிப்பாளையத்தை அடுத்து உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சைலன்டாக, மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திறக்கப்பட்டதால், பொது மக்களுக்கு தெரியவில்லை. அப்படியே, மது விற்பனை படுஜோராக நடந்து வந்துள்ளது. இந்தத் தகவலை அறிந்த பெண்கள் சிலர் இன்று அந்த மதுக்கடைக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மதுபாட்டில்களை உடைக்க முயன்றுள்ளனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய கடை ஊழியர்கள், பெண்களைத் தாக்கியுள்ளனர். இதை அறிந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்கடைக்குச் சென்று பாட்டில்களை உடைத்து கடையை சூறையாடினர். பின்னர், அங்கு வந்த காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தது. இதுகுறித்து அகிலாண்டேஸ்வரி கூறுகையில், “நாங்க சாதாரணமா பேசலாம்ணுதான் வந்தோம். ஆனா, அவங்க எங்கள பிடிச்சு தள்ளினாங்க. அதுக்கு அப்பறம்தான் கடையை அடிச்சு நொறுக்கினோம். நைட் நேரம் இந்த வழியா வரப்ப செயின் அறுக்கறாங்க. நிறைய குற்றம் நடக்குது. நாங்களும் கரன்ட் பிரச்னை, தண்ணீ பிரச்னைனு பல தடவ அரசுக்கிட்ட போய்ருக்கோம். அப்ப எல்லாம் கண்டுக்காத அரசு, இப்ப மதுக்கடைக்கு ஒரு பிரச்னைனு தெரிஞ்ச உடனே, போலீஸ்காரங்கள அனுப்பி லத்தியால அடிக்கறாங்க. இந்த ஏரியாவுல நாங்க கட்டடம் கட்ட அனுமதியே இல்லனு சொன்னாங்க. இப்ப மதுக்கடைக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தாங்கனு புரியல” என்றார் வேதனையுடன்.