நேற்றைய தினம் கணவன் வெளி நாட்டில் உள்ள நிலையில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த தற்கொலைக்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது. பல நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நுண் கடன் திட்டமே குறித்த பெண்ணின் சாவுக்கு காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண், நிதி நிறுவனம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் நுண் கடன் பெற்றிருந்தார். அதனைச் செலுத்தவேண்டிய தவணை நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) என இருந்த நிலையிலேயே நேற்றைய தினம் தற்கொலையினைத் தழுவிக்கொண்டார்.
பொலிஸ் தரப்புத் தகவலின்படி, இறந்தவர் வினாசியர் வீதி, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான செல்வம் யோகேஸ்வரி (26 வயது) என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் கட்டார் நாட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த நுண் கடன் பெறப்பட்டுள்ளது. கணவர் அனுப்பும் பணத்திலிருந்து சிறுதொகைப் பணத்தினை இந்த நுண் கடனுக்காக செலுத்திவந்துள்ளார்.
எனிதும் தற்பொழுது கணவன் கட்டாரிலிருந்து நாடு திரும்பி வேலை வாய்ப்பின்றி இருந்த நிலையில் நுண் கடனைச் செலுத்துவதற்கு குறித்த பெண் திண்டாடியுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இருபத்தையாயிரத்துக்கும் மேற்பட்ட தொகையினைக் கடன் பணமாகத் திருப்பிச் செலுத்தவேண்டியிருந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டமை அன்னைவர் மத்தியிலும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பல நிதி நிறுவனங்கள் கஸ்டப் பிரதேசங்களை இலக்குவைத்தே இந்த நுண் கடன் திட்டங்களை வழங்கி வருகின்றன. குறித்த நுண் கடன் திட்டங்களால் கடந்த காலத்தில் பலர் தற்கொலை செய்துள்ள நிலையிலும் தற்கொலைக்கு முயன்ற நிலையிலும் குறித்த நுண் கடன் திட்டங்கள் இன்றும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கடன் தவணைப் பணத்தினைச் செலுத்தத்தவறும் மக்களை குறித்த நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நுண் கடன் திட்டங்களை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் பல சமூக ஆர்வலர்களிடமிருந்து வந்துகொண்டிருக்கும் நிலையிலும் அரசாங்கம் அது தொடர்பான எந்தவொரு முனைப்பையும் காட்டாதிருப்பது வேதனையளிப்பதாக பலரும் அங்கலாய்த்துள்ளனர்.