• கூலி தொழிலாளியான கார்த்திக் எனும் 19வயது இளைஞன் ஒருவனின் மூளையை சாவடைய வைத்து, அவனின் உடல் உறுப்புகளை திருடி சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
• ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல் சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?
• மருத்துவர்களின் அறிவுரையை மீறி கார்த்திக், ஹெலி அம்புலன்ஸ் மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு கார்த்திக் மூளை சாவடைந்ததாக கூறப்படவில்லை.
………………………………………….
ஒரு மன்னர் வயது முதிர்வால் மரணிக்கும் தறுவாயில் இருக்கும் போது அவர் இளைஞன் ஒருவனின் இளமையை பெற்று மீண்டும் திடகாத்திரமானவராக 100 ஆண்டுகள் வாழ எத்தனித்ததாக கதைகளில் கேட்டிருக்கின்றோம்.
அந்த கதை தற்போதைய கால கட்டத்துக்கு மிகவும் பொருத்தமானதே.
இக்கால கட்டத்தில் மரணத்தை வெல்லும் மார்கண்டேயர்கள் யாரும் பிறக்கவில்லை. ஆனால் ஆண்டுகள் 1000 கடந்து வாழவேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்ளது.
அதற்காக எதையும் செய்யும் மனமும் பணமும் இருந்தால் சொல்வதற்கில்லை. தான் வாழ எத்தனை தலைகளை வேண்டுமானாலும் உருள வைக்க சிலர் எத்தனிக்கின்றனர்.
மனித உரிமைகள், நீதி, மானுடம் என எத்தனை விடயங்கள் பேசப்பட்டாலும் மனிதத்தை கொல்பவர்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்கின்றனர்.
இன்றைய உலகில் மனிதன் கனவிலும் நினைக்காத விந்தைகளை கூட தனது விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியால் கண்முன்னே நடத்திகொண்டிருக்கின்றான்.
என்றோ ஒருநாள் மரணத்திடம் தோற்று போகும் அவன், அதனை வெல்ல பல முயற்சிகளை மேற்கொள்வதோடு தன் ஆயுளை இரட்டிப்பாகும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளான்.
அதுவும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்று எல்லையில்லா அளவு வளர்ந்து விட்டது. கண் தொட்டு இதயம் வரை பல உறுப்புகளை மாற்றிவிடுகின்றான்.
நாம் இறந்த பின்பு மண்ணுக்கு போகும் உறுப்புகளை மற்றவர்களுக்கு வழங்கி அதன் மூலம் இன்னொரு உயிரை வாழவைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அனுதினமும் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
இது ஒரு ஆரோக்கியமான விடயமே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்கு இயற்கையாக வரும் ஒரு உடல் உபாதைக்கு நலமுடன் வாழும் ஒரு உயிரை அழித்து அதன் மூலம் தான் சுகதேகியாக வாழும் செயல் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது.
எந்த கொடிய மிருகமும் செய்யாத இச்செயலை மனிதன் திறமுடன் செய்துகொண்டிருக்கிறான்.
இதனை இயக்குநர் கௌதம் வாசுதேவின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் மிக தெளிவாக விளக்கியிருந்தார்.
அது வெறும் கதை என்று பார்த்தவர்களுக்கு இன்று அதுபோல தன்னை சுற்றி நடக்கும் சாதாரண சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றன.
அந்தவகையில் தமிழகத்தில் கடந்த வாரம் சசிகலாவின் கணவர் நடராஜனின் அறுவை சிகிச்சையும் இது போன்ற ஒரு பெரும் சர்ச்சையை, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம். கடந்த வாரம் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
சசிகலாவின் கணவரான நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இரு முறை தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசின் உறுப்பு மாற்று ஆணையகத்தில் பதிவு செய்திருந்த போதிலும் அவருக்கு உடனடியாக மாற்று உறுப்பு கிடைக்கப்பெறவில்லை.
குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று ௨அறிக்கைகள் வெளியிட்ட நிலையில், “விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளது’ என்று நம்பிக்கையுடன் சொன்னார் தினகரன்.
அவரது உறவினர்கள் இருவர் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை தானமாக கொடுக்க உள்ளதாக செய்திகள் பரவின.
ஆனால் , திடீரென மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலை சேர்ந்த 19 வயது கூலி தொழிலாளியான கார்த்திக் கடந்த மாதம் 30ஆம் திகதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சுயநினைவின்றி பின்னர் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மருத்துவமனைகளிலும் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே மருத்துவர்களின் அறிவுரையை மீறி கார்த்திக்கை அழைத்து சென்ற உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாக நடராஜனுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அங்கு இளைஞர் கார்த்திக் மூளை சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இந்த முரண்பட்ட தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அதாவது குடிசையில் வாழும் குடும்பம், உழைத்தால் மட்டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில் கூலி தொழிலாளியான கார்த்திக்கை சில இலட்சங்கள் செலவாகும் ஏர் அம்புலன்ஸில் சென்னை கொண்டு வந்தது யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
பணம் செலவழிக்க முடியாததால் தான் கார்த்திக் அறந்தாங்கி, புதுக்கோட்டை என மாறி மாறி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்.
திடீரென அவரை சென்னைக்கு அழைத்து வர எங்கிருந்து பணம் வந்தது? அத்தோடு அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்களின் அறிவுரையை மீறி கார்த்திக், ஹெலி அம்புலன்ஸ் மூலம் திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு கார்த்திக் மூளை சாவடைந்ததாக கூறப்படவில்லை. ஆனால் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு பின்னிரவு 01:45 மணிக்கு கொண்டுவரப்பட்ட கார்த்திக்கை மறுநாள் காலை 10:30- மணிக்கு சோதித்த நரம்பியல் மருத்துவர், கார்த்திக் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
கார்த்திக் மூளைச்சாவு அடைந்ததால் அவரது கல்லீரலையும் சிறுநீரகத்தையும் நடராஜனுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
மேலும் தஞ்சாவூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகள் தான் நடராஜனுக்கு பொருத்தப்படவுள்ளதாக 2 நாட்களுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின.
இதுபோன்ற முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் உடல் உறுப்பு தானத்தில் பேரம் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே தானமாக பெறப்பட்ட உடலுறுப்புகளை நடராஜனுக்கு பொருத்த அனுமதி வழங்கியது ஜெயலலிதா கைரேகை சர்ச்சையில் சிக்கிய மருத்துவர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கார்த்திக்கின் உறுப்புகளை நடராஜனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை அவருக்குத்தான் பொருத்தப்பட்டதாக கூறாமல் 74 வயது நபருக்கு என மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது.
அதாவது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பால் உயிருக்குப் போராடி வந்த நடராஜனுக்கு மூளைச்சாவு அடைந்த ஏழை இளைஞர் ஒருவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
ஆயினும் குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் மூலம் எழும் கேள்விகள்;
ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல் சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?
உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் கல்லீரலும் சிறுநீரகமும் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே குளோபல் மருத்துவமனைக்கு சென்றது எப்படி?
அது எதேச்சையாக நடந்ததா? அல்லது கார்த்திக் திட்டமிட்டு குளோபல் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா?
கார்த்திக் உண்மையாகவே மூளைச்சாவு அடைந்தாரா? அல்லது மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா?
கார்த்திக்கின் பெற்றோர் மருத்துவர்களின் பேச்சை மீறி இரவோடிரவாக அவரை அழைத்து சென்றுள்ளனர். எனவே மகன் இனி பிழைக்க மாட்டார்.
ஆனால் மண்ணுக்கு போகும் அவர்களுக்கு உறுப்புகளை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் பல இலட்சங்களை பெறலாம் என அவருக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம்.
இறக்க போகிறவரை கட்டிலுக்கு பாரமாக வைத்திருப்பதை விட அவன் இறந்தும் தம்மை வாழ வைக்க போகின்றான் என்ற மன திருப்திக் கூட பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் உறுப்பு மாற்றுக்கு நாங்கள் பணம் பெறவில்லை என அவரது அம்மா கூறியுள்ளார். ஆயினும் விதிகளை மீறி நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை என இது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் வெளியான தகவல் ஒன்று இது திட்டமிட்ட படுகொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடராஜனுக்கு உறுப்பு தேவை என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவரது மன்னார்குடி உளவாளிகளினால் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒத்த பொருந்த கூடிய உறுப்புகள் உள்ள ஒருவர் கிடைக்கப்பெற்றதும் குறித்த நபரைதிட்டமிட்டு கடத்தி தமக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது.
அதாவது கார்த்திக் கடந்த செப்ெடம்பர் 30ஆம் திகதி மதியம் பைக்கில் சென்ற போது அறந்தாங்கியில் இருந்து கீரமங்கலம் நோக்கிச் சென்ற காரின் வேகம் கண்டு தடுமாறி, மோதியதில் 10 அடி உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்ததில் இரத்த சகதியானார்.
அருகிலிருந்த மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றும் பயனில்லாததால், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு 7 மணிக்கு வந்த ஒருவர் தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகம் செய்து கொண்டு கார்த்திக்கின் உறவினர்கள் கூடவே மருத்துவமனைக்குள் சென்றுள்ளார்.
“தலையில் பலத்த காயம் இருக்கு. உடனே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கணும்’ என்று மருத்துவர்கள் சொல்ல அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. ஊழியர்களிடம் ரூ. 2 ஆயிரத்தை வழக்கறிஞர் கொடுத்துவிட்டு, கார்த்திக்கின் உறவினர்களிடமும் பணத்தை நீட்ட அவர்கள் மறுத்துவிட்டனர்.
வழக்கறிஞர் என்று சொல்லிக்கொண்டவரோ, “உங்களுக்கு மணமேல்குடி கார்த்திகேயன் அண்ணனை தெரியும்ல.… அவருக்கு வேண்டிய நான்தான் இந்த விபத்து வழக்கை நடத்தப்போறேன்’ என்று சொல்லிக் கொண்டு, சில வெளி மருத்துவர்களையும் அழைத்து வந்து காட்டியுள்ளார்.
அவர்களும் “பையனுக்கு நினைவு திரும்பி கண் விழித்த பிறகுதான் ஆபரேசன் செய்ய முடியும். அதுவரை இருக்கட்டும்’ என்று சொல்லிச் சென்றுள்ளனர்.
இளைஞர் கார்த்திக் கண் விழிக்காத நிலையில், 2-ஆம் திகதி அதிகாலை கார்த்திக்கின் அக்கா புவனாவிடம் “உங்க வீட்டில் உள்ளவர்களின் ஆதார் அட்டைகளை கொண்டு வாங்க’ எனக் கேட்டு வாங்கிய குறித்த வழக்கறிஞர் .
அதன்பின், இரவு 8 மணிக்கு திடீரென ஒருவரை அழைத்துவந்து பரிசோதனைக்கென கார்த்திக்கிடமிருந்து இரத்தம் எடுத்துள்ளார்.
இரவு 10 மணிக்குப் பிறகு வந்த வழக்கறிஞர் கூட இருந்த நண்பர்களிடம் “இந்த விபத்துக்கு ரூ.8 இலட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்பவே சென்னை அப்பலோ கொண்டு போய் சிகிச்சை எடுத்து பிழைக்க வைக்கலாம்.
பணம் நீங்க தர வேண்டாம். இன்சூரன்ஸ் வந்ததும் தரலாம்’ என்று சொல்ல. “அனைவரும் சரி போகலாம்’ என்று சொல்லியுள்ளனர்.
இரவு 11 மணிக்கு சில கார்கள் வர “கார்த்திக்கின் அம்மா, அப்பா, அக்கா எல்ேலாரும் அம்புலன்ஸ்ல வரட்டும்’ என்று சொன்ன வழக்கறிஞர் கார்த்திக்கின் நண்பர்களை காரில் ஏற்றி சென்னைக்கு அனுப்பியுள்ளார்.
பின் அம்புலன்ஸை திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும்படி உத்தரவிட, அங்கிருந்து சென்னைக்கு ஏர் அம்புலன்ஸ் மூலம் கார்த்திக்கைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், அப்பலோவுக்குப் பதில் குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். காரில் வந்தவர்களையும் அங்கேயே அழைத்துச் சென்றுள்ளனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது அம்மா, அப்பா, அண்ணன், அக்கா ஆகியோரை மட்டும் தனியாக ஒரு அறையில் தங்க வைத்துள்ளனர்.
வழக்கறிஞர் கூடவே வேறு அறையில் கார்த்திக்கின் நண்பர்கள் தங்க வைக்கப்பட்டனர். செல்போன் பேச்சுகளுக்குத் தடை போடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், நடராஜனுக்கு வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
சென்னை சென்ற கார்த்திக்கின் நண்பர்களில் சிலர் “அப்பல்லோவுல வச்சு வைத்தியம் செய்யலாம், செலவை இன்சூரன்ஸ்ல இருந்து கட்டலாம்னு வழக்கறிஞர் சொன்னார்.
ஆனால் குளோபலுக்கு கூட்டி வந்துட்டாங்க. அவங்க அம்மா, அப்பாவை உள்ளே கூட்டிப்போனதோட சரி வெளிய வரல. அதனால் உள்ள வச்சே அவங்களோட சம்மதத்தை வாங்கியிருக்கலாம்” என்கின்றனர்.
இந்த முயற்சிகளை எடுத்தது யார்? என்ற கேள்விக்கு அறந்தாங்கி வட்டாரத்தில் இருந்து வந்த பதில் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளமையானது… “”மன்னார்குடிக்கு ரொம்பவே வேண்டப்பட்டவர் மணமேல்குடி கார்த்திகேயன்.
தற்போதைய தினகரன் அணி மாவட்ட செயலாளர். இவர் கலைஞரை எதிர்த்து திருவாரூரில் 2011-இல் போட்டியிட்ட குடவாசல் எம்.ராஜேந்திரனோட மருமகன். அறந்தாங்கி அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதிக்கு தம்பி. அவர்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகளை பிறருக்குப் பொருத்துவது என்றால் அந்த உறுப்புகளை மட்டும்தான் எடுத்துக்கொண்டு போவார்கள்.
ஆனால் கார்த்திக்கை மட்டும்தான் ஆளையே கொண்டுபோய் வைத்து உறுப்புகளை எடுத்துள்ளனர். இதற்கு அரசு அனுமதியும் வேண்டும் என்பதால்தான் 3ஆம் திகதி காலை தனது அண்ணன் ரெத்தினசபாபதி மற்றும் மாவட்ட ஆட்சியர் கணேஸை நேரில் பார்த்து தகவல் சொல்லியிருக்கிறார் கார்த்திகேயன்” என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில்தான் 3-ஆம் திகதி இரவு 10 மணிக்குப் பிறகு கார்த்திக்குக்கு அறுவை சிகிச்சை செய்து கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செயல்பாட்டில் உள்ள உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அவரது மரணம் அறிவிக்கப்பட்டது.
மிகக் கச்சிதமாக காய் நகர்த்திய மன்னார்குடி தரப்பு, கார்த்திக் குடும்பத்திற்கு மொத்தமாக பத்து லட்ச ரூபா தரவும் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் இது உடல் உறுப்புக்காக நடந்த படுகொலை. உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடல் உறுப்பு தானத்தில் மோசடிகள் அரங்கேறவும், பணத்துக்காக உறவினர்களே, தங்களின் உறவுகளை உயிரோடு விற்க, சிறந்த முன்னுதாரணம் என்றே கூறலாம்.
இந்த மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க நீதிமன்றத்துக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்த பிரச்சினையை தானாக முன்வந்து, வழக்காக எடுத்து, விசாரணை நடத்த வேண்டும்.என்று தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இது தொடர்பில் என்ன விசாரணை நடத்தினாலும் பரவாயில்லை என்று தினகரன் தரப்பு கூறிவிட்டனர். சிலவேளைகளில் எடப்பாடி, பன்னீர் தரப்பு இவ்விடயங்களை பெரிது படுத்தலாம்.
ஆனால் அதற்கும் அவசியம் இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில் சசிகலா பரோலில் வந்த போது கூட அவரை அமைச்சர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
எடப்பாடி, பன்னீர் தரப்பு சசிகலாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சசிகலாவும் அமைதியாக வந்து அமைதியாக சிறைக்கு சென்று விட்டார்.
இனி சசி தரப்பால் அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. ஏனெனில் தினகரன் ஆட்சியை மாற்றுவோம் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஏதேதோ கூறிவிட்டார் எதுவும் நடக்கவில்லை. இவ் ஆட்சிக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றமையால் அத்தனை எளிதாக ஆட்சியை கலைக்க முடியாது.
ஒருவேளை யாராவது இந்த நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கார்த்திக் மரணம் தொடர்பில் வழக்கு தொடர்ந்தால் கூட உண்மைகளை கண்டறிவது சாத்தியமற்றதே. ஏனெனில் இங்கு எமனுக்கே எமனாக சில அதிகார வர்க்கங்கள் மாறிவிட்டன.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தன் கண் அசைவிலேயே ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டு அடிபணியவைக்குமளவு அத்தனை கம்பீரமாக வலம்வந்தவர்.
ஆனால் 75 நாட்கள் அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. வெளியுலகுக்கு இன்னும் தெரியவில்லை. இஸட் பிரிவு பாதுகாப்பில் இருந்த அவரது மரணமே மர்ம முடிச்சாக உள்ள போது சாதாரண கூலி தொழிலாளியின் மரணத்துக்கு எங்கிருந்து நீதி தேடுவது?
மர்மத்தை விளக்குவது? நிச்சயம் இதுவும் கடைசிவரை மர்மமாகவே இன்னும் சில காலங்களில் மறைந்து போகக்கூடும்.