நெதர்லாந்து: சிறுவர்களுக்கான சர்வதேச அமைதி பரிசை மலாலா யூசுப்ஜாய் பெற்றது போல் அந்த பரிசுக்கு தமிழக மாணவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்தி (12). நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது திட்டிவிட்டதால் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார். அதன் பின்னர் தெருக்களில் யாசகம் கேட்பது, ஊசி பாசி மணிகளை விற்பது போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்.
படிப்பை தொடர வைத்தது
சிறுவன் சாலையில் பிச்சையெடுப்பதை பார்த்த தன்னார்வல அமைப்பு ஒன்று சக்தியின் பெற்றோரிடம் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. அதன் பின்னர் சக்தி அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தனது படிப்பை தொடர்ந்தார். அந்த திட்டத்தின் நோக்கமே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய பிள்ளைகளை மீண்டும் கல்வியில் தொடரவைப்பதுதான்.
ஏளன பார்வை
நரிக்குறவ சமூகம் என்றாலே கேலி கிண்டலுடன் பார்ப்பவர். அவர்களும் மனிதர்கள் என்பதை பெரும்பாலானோர் நினைப்பதில்லை. பள்ளிப் படிப்பை தொடர்ந்ததால் தனது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம், சமூகத்தில் சக்தி, கிடைத்த கௌரவம் ஆகியவற்றை பார்த்தவுடன் சக்திக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதனால் தம்மை போல் படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தார்.
மலைவாழ் குழந்தைகள் படிப்பை தொடர…
இந்நிலையில் பள்ளி படிப்பை பாதியில் முடித்துக் கொண்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள மலைவாழ் குழந்தைகள் 25 பேரை பள்ளியில் சேர்த்துவிட்டார். இதற்காக அவர் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியதால் இன்று 25 குழந்தைகள் படிப்பை தொடர்கின்றனர்.
அமைதிக்கான விருது
சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் உரிமை, குழந்தை தொழிலாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் இவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுக்காக 169 குழந்தைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அந்த 169 பேரில் சக்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவன அதிகாரிகள் கூறுகையில், கல்வி கற்பதால் சக்தியின் வாழ்க்கை முறை மட்டுமல்லாது அவரது சமூகத்தின் வாழ்க்கை முறையும் மாறியுள்ளது. அதனால் அவரது பெயரை விருதுக்கு பரிந்துரைத்தோம். 169 பேரில் மிகவும் சிறிய வயதுடையவர் சக்தி ஆவார் என்றனர். இந்த விருதை இதற்கு முன்னர் மலாலா வாங்கியது குறிப்பிடத்தக்கது.