8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி

இரான், லிபியா, வடகொரியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகளை, தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிபதி ஒருவர் தடை விதித்துள்ளார்.

2i1XlAz

இரான், லிபியா, சிரியா, ஏமன், சோமாலியா, சாட், வடகொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மற்றும் வெனிசுவேலாவில் இருந்து வரும் குறிப்பிட்ட சில தனி நபர்கள் ஆகியோரை குறிவைத்து பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு புதன்கிழமை முதல் அமலுக்கு வரவிருந்த நிலையில் டிரம்பின் தடைக்கு நீதிபதி தடை விதித்துள்ளார்.

டிரம்பின் இந்த பயணத் தடை உத்தரவுக்கு எதிராக ஹவாய் மாகாண அரசு வழக்குத் தொடர்ந்தது. அமெரிக்க குடியேற்றச்சட்டத்தின்படி இப்படி ஒரு தடையை விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று அது வாதிட்டது.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி டெர்ரிக் வாட்சன் டிரம்பின் இந்த உத்தரவு அமலுக்கு வருவதற்கு தாற்காலிகத் தடை விதித்தார்.

ஆறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் குறிவைத்து கடந்த மார்ச் மாதம் டிரம்ப் பிறப்பித்த இதே போன்ற ஒரு பயணத் தடை உத்தரவுக்கு இதே நீதிபதியே தடை விதித்தார்.

தற்போதைய புதிய பயணத் தடை உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதி வாட்சன், முந்தைய தடை உத்தரவில் இருந்த அதே தவறுகள் புதிய உத்தரவிலும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

_98360459_ee8c92d9-0e69-4934-9a7e-7a88cf2ca8a8

குறிப்பிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த 150 மில்லியன் மக்களின் வருகை அமெரிக்காவின் நலன்களுக்கு பாதகமாக இருக்கும் என்று குறிப்பிடுவதற்குப் போதிய அடிப்படைகள் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி ஒரு தடையை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று முந்தைய பயணத் தடையை விசாரித்த கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்து இப்படி ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதி வாட்சன் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

உலக அளவிலான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த மறு ஆய்வு மற்றும் தகவல் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறுகிறது.

ஆனால், முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைவதை முழுமையாகத் தடை செய்வதாக டிரம்ப் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், வடகொரியாவும், வெனிசுவேலாவும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமே ஒரே வித்தியாசம் என்றும் இத்தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த ஹவாய் வாதிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவு ஆபத்தான தவறு என்றும், அமெரிக்கர்களின் பாதுகாப்பதற்கான முயற்சியை பாதிப்பது என்றும் குறிப்பிட்ட வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் சாரா ஹக்கபீ சாண்டர்ஸ், இறுதியில் நீதித்துறை இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்ளும் என நம்புவதாகவும் கூறினார்.