கறுப்பு தாஜ்மஹால் பற்றிய உண்மை

தாஜ்மஹால்

உலக அதிசயங்களில் ஒன்றாக பெருமைபெற்ற தாஜ்மஹால் தற்போது விவாதப் பொருளாகிவிட்டது. உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட பின்பு சர்ச்சைகள் அதிகரித்தன.

தாஜ்மஹாலின் வரலாற்று முக்கியத்துவத்தை பற்றி பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் சன்கீத் சோம் முன்வைத்த விமர்சனங்கள் சர்ச்சைகளை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டன.

விவாதபொருளாக தாஜ்மஹால் இருந்தாலும், இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதிக அளவிலான மக்களை ஈர்க்கும் இந்த நினைவுச்சின்னத்தின் அழகோ அல்லது கம்பீரமோ விவாதத்திற்கு உள்ளாகவில்லை.

கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும், காதலின் அடையாளச் சின்னமாகவும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது தாஜ்மஹால்.

தாஜ்மஹாலின் பிரம்மாண்டத்திற்கு சற்றும் சளைத்ததல்ல அதைச் சுற்றியுள்ள சர்ச்சைகளும், நம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செவிவழிச் செய்திகளாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு என பரவியவை இந்த புனைகதைகள். அவற்றில் சில…

கறுப்பு தாஜ்மஹால் பற்றிய உண்மை

தாஜ்மஹால்

தற்போது ஆக்ராவில் இருப்பது போலவே மற்றொரு தாஜ்மஹாலை கட்ட விரும்பினாராம் ஷாஜஹான். ஒரே வித்தியாசம், இப்போது இருப்பதைப் போல வெண் பளிங்கு நிற தாஜ்மஹால் இல்லை, அவர் கட்ட விரும்பியது கருப்பு நிற தாஜ்மஹால்.

“கருப்பு பளிங்கு கற்களால் தாஜ்மஹாலைப் போன்ற மற்றொரு பிரம்மாண்ட கட்டுமானத்தைக் கட்டவேண்டும் என்பது ஷாஜஹானின் விருப்பம்” என்று கூறுகிறது உத்தரபிரதேச மாநில அரசின் தாஜ்மஹால் வலைதளம்.

யமுனை நதியின் மறுபுறத்தில் மாஹ்தாப் பாக் பகுதியில் கருப்பு தாஜ்மஹால் கட்ட திட்டமிடப்பட்டது.

காதல் மனைவி மும்தாஜுக்காக வெண் பளிங்கு கற்களால் ‘சொர்க்கத்தை’ கட்டிய ஷாஜகான், தனது சொந்த கல்லறைக்காக கருப்பு நிற மஹாலை கட்ட விரும்பினார். ஆனால், அவரது மகன் அவுரங்கசீப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் ஷாஜகானின் கருப்பு தாஜ்மஹால் கனவு கனவாகிப்போனது.

தந்தை ஹாஜஹானை வீட்டுக் காவலில் வைத்தார் மகன் அவுரங்கசீப்.

தாஜ்மஹால்

1665ஆம் ஆண்டு ஆக்ரா வருகை தந்த ஐரோப்பிய எழுத்தாளர் ஜென் பாப்டிஸ்ட் (Jen-Baptiz) கூறிய கருத்து இது என்று மாநில அரசின் வலைதளம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நாட்களில் நோய்வாய்ப்பட்டிருந்த ஷாஜகான், தனது அறையின் சுவரில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் பிரத்யேகமாக பொறிக்கப்பட்ட ஒரு வைரத்தின் உதவியால் தாஜ்மஹாலை பார்த்து ரசித்தார்.

இருந்தபோதிலும், இதுவும் கற்பனைக் கதை என்பதே வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாக இருக்கிறது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரான நஜஃப் ஹைதர் இடைக்கால வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் கூறுகிறார், “கருப்பு தாஜ்மஹால் கதையில் எந்த உண்மையும் இல்லை. இது ஒரு கற்பனைக் கதை.”

அவர் சொல்கிறார், “வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் தாஜ்மஹால் பற்றி நிறைய கதைகள் உலாவுகின்றன. உண்மையில், தாஜ்மஹால் அவர்களை மிகவும் ஈர்க்கிறது”.

“ஆனால் அவர்களுக்கு தாஜ்மஹாலைப் பற்றி அதிக தகவல்கள் தெரியவில்லை. இதனால் பல கட்டுக்கதைகள் புனையப்படுகின்றன. அவை எளிதில் கிடைக்கும் ஆங்கில புத்தகங்களாக இருப்பதால் மிகவும் பரவலாக பேசப்படுகின்றன.”

தொழிலாளிகளின் கைகள் வெட்டப்பட்ட கதை

தாஜ்மஹால்

தாஜ்மஹாலை உருவாக்கிய தொழிலாளர்களின் கைகளை ஷாஜகான் வெட்டியது பற்றிய கதையும் பிரபலமனதே. தனது கை வெட்டப்படுவதற்கு முன்னதாக ஒரு தொழிலாளி தாஜ்மஹாலின் கூரையில் துளையிட்டு விட்டதால், இப்போதும் அந்த துளையின் வழியாக தண்ணீர் சொட்டுகிறது என்ற கதையையும் சிலர் அறிந்திருக்கலாம்.

இந்த கதையில் உண்மை இல்லை என்று விளக்குகிறார் நஜஃப் ஹைதர். “ஷாஜகான் கையை வெட்ட வேண்டும் என்றால் தாஜ்மஹால் கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த உயரதிகாரிகளின் அதாவது திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்களின் கையைத்தானே வெட்டியிருக்கவேண்டும்? இடப்பட்ட பணியை நிறைவேற்றியவர்களுக்கு திட்டமோ அதன் பிரம்மாண்டமோ தெரிய வாய்ப்பில்லை”.

“தொழிலாளர்களின் கைகளை வெட்டுவதன் மூலம் என்ன கிடைக்கும்? இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றி, அந்த உழைப்புக்கான கூலியை பெறுபவர்களின் கையை வெட்டுவார்களா என்று சிந்தித்துப் பார்த்தாலே இது கட்டுக்கதை என்று புரிந்துவிடும்”.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வேலையாட்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.”

இத்தகைய கதைகள் சுற்றுலா வழிகாட்டிகளால் புனையப்பட்டு, பரப்பப்படுகின்றன என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் நஜஃப் ஹைதர் கூறுகிறார்.

தாஜ் மஹால் பற்றி புதிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாங்களாகவே புதிய கதைகளை சுற்றுலா வழிகாட்டிகள் உருவாக்கி சுற்றுலாப் பயணிகளின் மனதை ஈர்க்கிறார்கள்.

மும்தாஜ் கோரிய நான்கு சத்தியங்கள்

தாஜ்மஹால்

மும்தாஜின் ‘சொர்க்கம்’ என்று தாஜ்மஹால் சொல்லப்படுவதும் கற்பனையே. சொர்க்கம் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அதைப் போன்றே அழகுடன் வடிவமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல புதிய சிறப்பு வழிமுறைகள் மற்றும் யோசனைகளின்படி தாஜ்மஹால் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மும்தாஜ் உயிருடன் இருந்த காலத்தில் தன் காதல் கணவரிடம் நான்கு வாக்குறுதிகள் வாங்கியதாக மாநில அரசின் தாஜ்மஹால் வலைதளம் கூறுகிறது.

தான் இறந்துவிட்டால், நினைவுச்சின்னம் கட்டவேண்டும் என்பது மும்தாஜின் முதல் வேண்டுகோள். அதை நிறைவேற்றுவதாக சத்தியம் செய்த ஷாஜகான், தாஜ்மஹாலை கட்டி முதல் வாக்கை மெய்யாக்கினார்.

தான் இறந்துவிட்டால், ஷாஜகான் மறுமணம் செய்துக் கொள்ளவேண்டும் என்பது இரண்டாவது வாக்குறுதி.

பெற்ற பிள்ளைகளை கையாள்வதில் கடுமைகாட்டக்கூடாது, மென்மையான அணுகுமுறை வேண்டும் என்பது ஷாஜகானிடம் மும்தாஜ் வாங்கிய மூன்றாவது சத்தியம். இந்த மூன்று சத்தியங்களையும் நிறைவேற்றினார் காதல் கணவர்.

ஆண்டுதோறும் தனது நினைவுநாளில் தாஜ்மஹாலுக்கு கணவர் வரவேண்டும் என்ற மும்தாஜின் நான்காவது வேண்டுகோளையும் நிறைவேற்றுவதாக வரமளித்தார் ஷாஜகான்.

முதல் மூன்று சத்தியங்களையும் காப்பாற்றமுடிந்த ஷாஜகானால் நான்காவது சத்தியத்தை நிறைவேற்றமுடியவில்லை.

வீட்டுக்காவலும், ஆரோக்கிய குறைவுமே காதல் மனைவிக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியாமல் தடுத்தது ஷாஜகானை.

தாஜ்மஹாலின் சிறப்பம்சங்கள்

தாஜ்மஹால்

1631ஆம் ஆண்டு தாஜ்மஹாலின் கட்டுமானப் பணிகள் தொடங்கினாலும், அது 1653இல் பூர்த்தியானது.

தாஜ்மஹால் கட்டுமானப் பணிக்காக இந்தியாவின் வடபகுதியில் இருந்து கிட்டத்தட்ட 20 ஆயிரம் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இந்திய-இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாக தாஜ்மஹால் கூறப்படுகிறது.