வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்த நாடகத் தொடர் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
“மிகவும் தைரியமான மற்றும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற புதியதொரு நாடகத் தொடராக இந்த தொலைக்காட்சி தொடர் இருக்கும்” என்று 2014 ஆம் ஆண்டு, சேனல்4 அறிவித்தது.
“ஆப்போசிட் நம்பர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் கதைக் கரு, ஒரு பிரிட்டன் அணு விஞ்ஞானி வட கொரியாவுக்கு கைதியாக கொண்டு செல்லப்படுவதாக அமைந்தது.
இதனைத் தயாரிப்பதில் ‘மேமோத் ஸ்கிரீன்’ நிறுவனம் ஈடுபடத் தொடங்கியதை, அடுத்து, அதனுடைய கணினிகள் தாக்குதலுக்கு உள்ளாயின.
இந்த நிகழ்ச்சியை தயாரிப்பதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவது தோல்வியடைந்ததை அடுத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்று இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
மிகுந்த கவலையளித்த நடவடிக்கை
இந்த தொலைக்காட்சி தொடர் பற்றிய தகவல்கள் வெளியானதும் வட கொரிய அதிகாரிகள் மிகவும் கோபத்துடன் மறுமொழி கூறினர்.
இந்த தொலைக்காட்சித் தொடரின் கதைக்கருவை “அவதூறான நாடகம்” என்று விவரித்திருந்த பியோங்யாங், ராஜீய உறவுகள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என்று பிரிட்டனைக் கோரியிருந்தது.
வட கொரியர்கள் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கவில்லை. நாடகம் தயாரிக்கவிருந்த நிறுவனத்தின் கணினி வலையமைப்புகளில் புகுந்து சேதம் விளைவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி முதன்முதலில் ‘நியூ யார்க் டைம்ஸ்’ வெளியிட்ட தகவலில், சேனல் 4 இந்த தாக்குதலின் முக்கிய இலக்காக இருந்தது என்று தெரிவித்திருந்தது.
ஆனால், உண்மையில் ‘மாமோத் ஸ்கிரீன்’ நிறுவனம்தான் உணைமையில் ஹேக்கர்களால் தாக்குக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பது பிபிசி-யின் புரிதல்.
இந்த இணையத் தாக்குதலால் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், இந்த திட்டத்தில் வட கொரிய ஹேக்கர்கள் இருப்பது தெரிய வந்துள்ளதே, அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்ற எச்சரிக்கையைத் தந்தது.
“இந்த நடவடிக்கை மிக விரைவாக இந்நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து திக்குமுக்காடவைத்தது” என்று அந்த நிறுவனத்தின் கவலையை பற்றி விவரிக்கும்போது, இன்னொரு நிறுவனத்தை சோந்த தொலைக்காட்சி செயலதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த இணைய தாக்குதல் பற்றி பிரிட்டன் உளவுத் துறையும் அறிந்திருந்தது.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘சோனி பிச்சர்ஸ்’ நிறுவனம் மிக மோசமான இணைய தாக்குதலுக்கு உள்ளானதால் இந்த கவலை மிக அதிகமாகவே இருக்கிறது.
‘கார்டியன் ஆப் பீஸ்’ என்கிற நிறுவனம் இதனை செய்ததாக தெரிவித்திருந்தாலும், வட கொரியாதான் இதற்கு பின்னர் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.
சோனி நிறுவனம் தயாரித்திருந்த ‘தி இண்டர்வியூ’ என்ற திரைப்படம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் படுகொலை செய்யப்பட்டதாக வர்ணிக்கும் அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அந்த இணைய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
சோனி நிறுவனத்தின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு, பொதுவெளியில் வெளியிடப்பட்டன. கணினி வலையமைப்பின் முக்கியமானதொரு பகுதி ஹேக்கர்களால் அழிக்கப்பட்டது.
மிரட்டல்கள் வந்ததால், திரையரங்குகள் இதனை வெளியிடாது என்ற கவலைகளுக்கு மத்தியில் இந்தத் திரைப்படம் இணையத்தில் வெளியானது.
இதனால், ஒபாமா நிர்வாகத்திலிருந்த வெள்ளை மாளிகை மிக வலுவான பதிலடி வழங்கியது. வட கொரியா மீது தடைகள் விதிக்கப்பட்டன.
‘சோனி பிச்சர்ஸ்’ போன்று பாதிக்கப்படாமல் இருந்தாலும், பிரிட்டனின் நிறுவனம் ஒன்றும் அப்போது இலக்கு வைக்கப்பட்டது என்று அதிகாரிகள் அறிந்திருந்தனர். ஆனால், அமெரிக்கா அளவுக்கு பிரிட்டன் அரசிடம் இருந்து தீவிர எதிர்வினை இல்லை. சோனி பிக்சர்ஸ் பாதிக்கப்பட்ட அளவுக்கு பிரிட்டன் நிறுவனத்துக்குப் பாதிப்பு இல்லை.
அதிகரித்த தீவிரம்
பிரிட்டனில் “ஆப்போசிட் நம்பர்” தொலைக்காட்சித் தொடர் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சேனல்4-ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச நாடகப் பிரிவின் இரண்டாவது பணித்திட்டமாக இந்த தொலைக்காட்சி நாடகம் இருந்தது.
இந்நேரத்தில், “மாமோத் ஸ்கிரீன்” நிறுவனமும், அதன் விநியோக கூட்டளி நிறுவனமான “ஐடிவி ஸ்டுடியோஸ் குளோபல் எண்டர்டெயின்மன்ட்” டும் சர்வதேச கூட்டாளி நிறுவனம் ஒன்றை இதற்காக தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தன.
ஆனால், 2015 ஆம் ஆண்டு ‘மம்மோத் ஸ்கிரீன்’ நிறுவனத்தை 2015ல் வாங்கிவிட்ட ‘ஐடிவி ஸ்டுடியோஸ்’ செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் பிப்ரவரி மாதம் பேசியபோது, “மூன்றாவது நிறுவனத்தின் நிதி ஆதரவு கிடைக்காததால், கூட்டு தயாரிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிக்க நிதி ஆதரவை பெறுவதிலும், தயாரிப்பை முன்னெடுப்பதிலும் ஏற்பட்ட தோல்வி, ஏதாவது விதத்தில் இந்த இணையத் தாக்குதலோடு தொடர்புடையதா என்று இதில் ஈடுபட்டுள்ள யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. .
வட கொரியாவில் இருந்து வரும் இணைய தாக்குதல் அச்சுறுத்ததல்கள் நின்றபாடில்லை. அந்நாட்டு ஹேக்கர்கள் தென் கொரிய வங்கிகள் மற்றும் ஊடகங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தி தங்கள் தீவிரத்தையும், கூர்மையையும் உறுதி செய்தனர்.
கடந்த மே மாதம் நடத்தப்பட்ட வான்னாக்ரை ரேன்சம்வேர் (இணையத் தாக்குதல் நடத்தி பணயப் பணம் கோரும் வைரஸ்) தாக்குதலுக்கு பின்னால் வட கொரியா இருப்பதாக பிரிட்டன் அதிகாரிகள் நம்பினர். பிரிட்டன் தேசிய சுகாதார சேவையின் முக்கிய பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டது.
ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக, பிரிட்டன் அரசிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் இல்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட இணைய தாக்குதல், வட கொரியா என்னவெல்லாம் செய்யவல்லது என்பது குறித்தும், இத்தகைய இணைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றபோது, பிரிட்டன் நிறுவனங்களும், அரசும் என்வாறு பதிலடி அளிக்கும் என்றும் கவலைகளைத் தந்துள்ளது.