வைரலாகி வரும் #MeToo ஹாஷ்டேக்! காரணம் என்ன?

_98352224_hashtag

கடந்த ஓரிரு தினங்களாக #MeToo என்னும் ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது. ஆண்களால் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்னும் ஹாஷ்டேகை பதிவிட்டும், அதனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.

குறிப்பிட்ட நகரம் என்றல்லாது உலகம் முழுவதுமே பெண்கள் ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், சீண்டலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள். அது பெண்களின் வீடாகவோ, பேருந்திலோ, இரயிலிலோ, பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகமாகவோ இருக்கலாம்.

கடந்த ஒரு சில தினங்களாக #MeToo என்னும் ஹாஷ்டேக் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் உலகமெங்கும் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகைகள் முதல் சாமானிய மக்கள் வரை என பல்வேறு தரப்பினர் தங்களுடைய அனுபவங்களுடன் #MeToo என்ற ஹாஷ்டேகையும் பதிவிட்டு வருகிறார்கள்.

இது எங்கே, எப்படி ஆரம்பித்தது?

சமீபத்தில், அமெரிக்காவின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு, துன்புறுத்தல், சீண்டல் உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளை அளித்து வருகிறார்கள்.

ஹார்வி மீது புகார் தெரிவித்தவர்களில் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி மற்றும் ரோஸ் மெக்கோவன் உள்ளிட்ட பலர் அடங்குவர்.

ஹார்வி, தன் மீது குற்றஞ்சாட்டியவர்களின் ஒப்புதலோடுதான் தான் பாலியல் உறவு கொண்டதாக கூறினாலும், தொடர் புகார்களின் காரணமாக அவர் அங்கம் வகிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பதவிகளில் இருந்தும் அவர் விலக்கி வைக்கப்பட்டு வருகிறார்.

ஹார்வியின் புகார்களை மையமாக வைத்து, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா மிலானோ என்பவர், “பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் “Me Too” என்று பதிவிட்டால், இப்பிரச்சனையின் அளவை மக்களுக்கு உணர வைக்கலாம்” என்று இரு தினங்களுக்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் #MeToo என்ற ஹாஷ்டேகுடன் தங்களது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அனிதா என்னும் ட்விட்டர் பயன்பாட்டாளர், “தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி இருப்பதாக” கருத்துத் தெரிவித்துள்ளார்.

பிரித்திகா சிங் என்னும் ட்விட்டர் பயன்பாட்டாளர், “ஒவ்வொரு பெண்ணும் பாலியல் சீண்டலை எதிர்கொண்டுள்ளதாகவும், அதற்கு நாம், ஒரு சில நேரங்களில் பொருட்படுத்தாமல் சென்றுவிடுவதாகவும், சில நேரங்களில் அதிர்ச்சிக்குள்ளாவதாகவும்” பதிவிட்டுள்ளார்.

ஹனிஷியா ராஜ் என்னும் பேஸ்புக் பயன்பாட்டாளர், “பெண்கள், எல்லா நாட்களும், எல்லா இடங்களிலும் ஏதோ ஒருவித தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், அவ்வாறு பாதிக்கப்படாத பெண்கள் யாரேனும் உள்ளனரா” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதுபற்றிய தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

வருண் வரதராஜன் என்னும் பேஸ்புக் பயன்பாட்டாளர், தனக்கு இந்த ஹாஷ்டேக் புதுமையாக தோன்றவில்லை என்றும், தன்னை சுற்றியுள்ள பெண்களின் கதையை அறிந்ததன் மூலம் பெண்கள் மற்றும் சமூகத்தை பற்றிய தனது பார்வையே மாற்றமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைபவ் சிங் என்பவர், #MeToo என்ற ஹாஷ்டேகை குறிப்பிட்டு, ஒரு ஆணாக தான் செல்லும் சாலை, அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் பெண்களை மதிப்பேன் என்றும், அவர்களுக்கு உதவுவேன் என்றும் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் #MeToo ஹாஷ்டேகை பயன்படுத்துவது போல, தவறேதும் செய்யாத ஆண்கள் ஏன் #IHaveNot அல்லது #IWillNever என்று வெளிப்படையாக தெரிவிக்கலாமே என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

t7

அமெரிக்காவில் தொடங்கிய இந்த #MeToo என்ற ஹாஷ்டேக் தற்போது பிரிட்டன், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என உலகம் முழுவதும் வேறுபட்ட கருத்துக்களை பெற்று வருகிறது.