திருமணத் தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும் பக்தர்கள் சனிக்கிழமைகளில் இந்த மலைக்கோயிலுக்கு செல்வார்கள். குறிப்பாக, புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு வரும் பக்தர்கள், மலை உச்சியில் உள்ள பெருமாள் கோயிலின் வெளிப்புறச் சுவரைப் பிடித்தபடி உள்ளங்கை அகலத்தில் உள்ள கட்டுமானத்தில் நடந்து சென்று கிரிவலம் சென்று வேண்டிக்கொள்வது வழக்கம். இக்கோயிலின் மேலே இருந்து கீழே பார்த்தாலே மயக்கம் வந்துவிடும் என்று பலரும் கூறுவர். எனினும் இந்தப் பகுதியை ஆண் மற்றும் பெண் பக்தர்கள் சுற்றிவருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 14-ந்தேதி (சனிக்கிழமை) ஆறுமுகம் என்பவர் கிரிவலம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி 3500 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். இதனால் அந்த சுற்றுச்சுவரை சுற்றுவது ஆபத்தானது. அதை தடுக்க வேண்டும். பக்தர்களை கிரிவலத்திற்கு அனுமதிக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சஞ்சீவிராய பொருமாள் கோவில் சுற்றுச்சுவரை சுற்றி வர போலீசார் தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து விளக்கமான பதாகை ஒன்றும் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் இனிமேல் கிரிவலம் செல்ல இயலாது.