தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று கூறுவது தவறான கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்று பயனாளிகளுக்கு வேட்டி சேலைகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் முழுவதும் 30 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
டிடிவி தினகரனின் ஒவ்வொரு செயலும் கட்சியை முடக்க வேண்டும் என்று இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மு.க. ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கும் தினகரனின் முயற்சி ஒருபோதும் பலிக்காது எனவும் ஜெயக்குமார் உறுதிப்பட கூறினார்.