அரசு பஸ் கண்டக்டருடன் பயணி கடும் வாக்குவாதம்!

சென்னை பிராட்வேயிலிருந்து கே.கே.நகருக்குச் செல்லும் அரசு பஸ்ஸை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்துவது தொடர்பாக, கண்டக்டருக்கும் பயணி ஒருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1030b3e3-2e12-4a7b-bf2f-ebb7ea0e1bd3_10036சென்னை பிராட்வேயிலிருந்து இன்று காலை 9 மணியளவில் கே.கே.நகருக்கு அரசு பஸ் (வழித்தடம் எண் 11 G) புறப்பட்டது. இந்த பஸ், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப் வந்தவுடன், பயணிகள் முண்டியடித்து ஏறினர். சிம்சன் பஸ் நிறுத்தத்துக்கு அடுத்துள்ள சாந்தி பஸ் நிறுத்தத்தில் இறங்க பயணி ஒருவர் டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர், ‘இந்த பஸ் அங்கு நிற்காது. நீங்கள் வேண்டுமென்றால் எல்ஐசி பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்.

உடனே பயணி, போர்டில் சாந்தியில் பஸ் நிற்கும் என்று போட்டுவிட்டு, நிற்காமல் சென்றால் எப்படி என்றதற்கு, ‘அது பழைய போர்டு’ என்று கண்டக்டர் பதில் கூறினார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அதன் பிறகு பயணி, எல்ஐசி பஸ் நிறுத்தத்துக்குரிய டிக்கெட்டை வாங்கிக்கொண்டு பயணித்தார். எல்ஐசி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அந்தப் பயணி, டிக்கெட்டை ஸ்கேன் செய்து, நடந்த சம்பவத்தை விரிவாகக் குறிப்பிட்டு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக புகார் பிரிவு செல்போன் நம்பருக்குரிய வாட்ஸ்அப்பில் அனுப்பினார்.

சென்னையில், அரசு பஸ் கண்டக்டர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் என்பது வாடிக்கையானது. இருப்பினும், பயணிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு சென்னை மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.