இந்தியாவின் ‘தீ நகரத்தின்’ நரக வாழ்க்கை: மெல்ல மெல்ல பூமியில் புதையும் துயரம்

இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பூமியும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது.

அருகே ஒரு வெடிச்சத்தத்தை மக்கள் உணர்ந்தார்கள். தங்களால் முடிந்த அளவு வேகமாக அவர்கள் வீடுகளை விட்டு ஓடத் துவங்கினார்கள். ஆனால், எல்லோராலும் ஓட இயலவில்லை. இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமுற்றனர்.

இவையெல்லாம் மிகவும் வேகமாக நடந்தேறிவிட்டது. ஒரு வீட்டை தொடர்ந்து மற்றொரு வீடு இடிந்து விழத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து புகை மற்றும் வாயுவானது பள்ளத்தில் இருந்து வெளிவரத் தொடங்கியது.

“அது ஒரு நிலநடுக்கத்தை போன்றிருந்தது. எல்லாமே ஆடத்தொடங்கின. நாங்கள் வீட்டை விட்டு ஓடத்தொடங்கினோம்,” என்று சாலையின் ஓரத்தில் கண்களில் கண்ணீருடன் நின்றுக்கொண்டு கூறுகிறார் 60 வயதான படேஸ்வர் ரவாணி.

“நான் திரும்பி பார்த்தேன். என்னுடைய வீடு ஏற்கனவே புதைந்துவிட்டது.”

ஜஹாரியாவின் மொஹரி பந்தில் வசிக்கும் ரவாணி, ஒரு தினக்கூலி தொழிலாளி.

பூமிக்கடியிலுள்ள சுரங்கத்தில் அடிக்கடி பற்றி எரியும் தீயினாலும் மற்றும் நடுங்கும் நிலப்பகுதியாலும் இந்த நகரமானது தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

சந்திரனை ஒத்த நிலப்பரப்பு:

சந்திரனை ஒத்த நிலப்பரப்பை கொண்டுள்ள இந்த இடமானது கடந்த ஒரு நூற்றாண்டாக ஏடாகூடமான, பொறுப்பற்ற மற்றும் அறிவியல்பூர்வமற்ற முறைகளில் சுரங்கம் தோண்டப்படுவதால் அந்நிலப்பகுதி பூமிக்குள் புதைந்து வருகிறது.

உயிரிழப்பு என்பது அங்கு சாதாரணமான ஒன்றாகிவிட்டது.

_97790571_mediaitem97790568பூமி, எவ்வித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென பிளக்கிறது.

புலாரிபந்த் என்னும் இடத்தில் சாலையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு தந்தையும் மகனும், அவ்விடத்தில் திடீரென பூமி பிளந்ததில் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்திற்கு கீழே நரகம் போன்ற பூமிக்குள் சென்றுவிட்டனர்.

அவர்களின் உடல்கள் கூட மீட்கப்படவில்லை.

நிலக்கரியே ராஜாவாக இருக்கும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள மாநிலமான ஜார்கண்டில் உள்ள ஒரு சுரங்கம் தோண்டும் நகரத்தில் நடந்த சம்பவம்தான் இது.

இங்கிருந்து கிடைக்கும் நிலக்கரி மிகவும் தரமான மற்றும் ஆக்ஸிஜன் உடன் வினைபுரியும்போது அதிக அளவு எரியும் தன்மையை கொண்டதாகவும் இருக்கிறது.

பூமிக்கடியில் சுரங்கங்கள் இயங்குவதற்கு அபாயகரமானவையாக இருப்பதால், அவற்றை பூமியின் மேற்பரப்பு நச்சு வாயுக்களை வெளியேற்றுவதால் அவை திறந்த வெளிப்பகுதிகளாக மாற்றப்படுகின்றன.

அடிக்கடி நிகழும் நிலப்பகுதி பிளவு மற்றும் உள்ளுக்குள் புதைதல் போன்றவற்றின் காரணமாக இப்பகுதியானது நாட்டின் வரைபடத்தில் இருந்து வேகமாக மறைந்து வருகிறது.

ஜஹாரியாவில் பற்றி எரியும் நிலக்கரி.

ஒரு கட்டத்தில், பூமிக்கடியில் சுரங்கத்தில் பற்றும் தீயானது சுமார் 250 சதுர கிலோமீட்டர் வரை பரவுகிறது.

“நிலத்தடி சுரங்க தீயைக் கட்டுப்படுத்த கடந்த காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு கனேடிய நிறுவனம் அந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டது” என்று கூறுகிறார் இந்தியாவின் நிலக்கரி ஆராய்ச்சி நிறுவனமான மத்திய நிலக்கரி மற்றும் எரிவாயு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர். பி.கே.சிங்.

“அந்நிறுவனம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மற்றும் சுரங்க தீப்பிழம்புகள் 17.32 சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் கொண்டுவரப்பட்டன.”

இந்த நடவடிக்கைள் போதுமானதல்ல என்று அங்கு வசிப்பவர்கள் கூறுகிறார்கள்.

நச்சுத்தன்மையுள்ள வாயுக்களான மீத்தேன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடால் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறார்கள்.

செல்வதற்கு வேறு இடமில்லை:

செழிப்புடன் இருந்த பல கிராமங்கள் தற்போது இல்லவேயில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதைவிட ஓரளவு பாதுகாப்பான இடத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளனர்.

ஆனால், சில மக்களோ ஜஹாரியாவே தங்களின் சொந்த இடமென்று இன்னும் அழைக்கிறார்கள்.

அதற்கு காரணம் அவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாக நிலக்கரி சுரங்க தொழிலை சார்ந்திருப்பதே ஆகும்.

ஜஹாரியாவில் நடக்கும் சட்டவிரோத நிலக்கரி எடுக்கும் பணி.

சமீபத்தில், நிலம் உள்ளே சரிந்து விழுந்து புதைந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக, சந்திரபுரா மற்றும் தன்பாத் ஆகிய பகுதிகளை இணைக்கும் 41 கிலோமீட்டர் நீளமுள்ள பயணிகள் ரயில்சேவையை அதிகாரிகள் நிறுத்திவிட்டார்கள்.

ஆனால், உள்ளூர் மக்களை கோபமுறச்செய்யும் வகையில் நிலக்கரியை சுமந்து செல்லும் சரக்கு ரயில்கள் அதே பாதையில் இயக்கப்படுகின்றன.

சரக்குரயில்கள் இயக்கப்படுவதற்கு எதிராக கட்ராஸ் மற்றும் தன்பாத் ஆகிய பகுதிகளிலுள்ள தண்டவாளத்தை ஆக்கிரமித்து மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கட்ராசில் உள்ள வழக்கறிஞரான பிஜய் ஜா, நிலத்தடி தீ பரவுதல் இல்லாத இடத்தில் ஏதோ உள்நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுவதாக தான் நினைப்பதாக கூறுகிறார்.

“நிலம் ஒவ்வொருமுறை உட்புதையும்போதும், மக்கள் வெளியேற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“அதன் பிறகு அப்பகுதியை திறந்தவெளி சுரங்கங்களாக மாற்றியவுடன், அம்மக்கள் வாழ்ந்த வீடுகளுக்கு அடியில் உள்ள நிலக்கரியை தோண்டி எடுக்கிறார்கள்.”

கல்லூரியை ஒரு 'பாதுகாப்பான' இடத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு எதிராக ஜஹாரியா குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

6,000 மாணவர்கள் படிக்கும் ஜஹாரியாவிலுள்ள ராஜா ஷிவ் பிரசாத் கல்லூரியை அங்கிருந்து ஆறு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் பாதுகாப்பான இடமொன்றிற்கு மாற்ற அதிகாரிகள் நினைக்கிறார்கள்.

இதுதான் ஜஹாரியாவின் பழமையான மற்றும் மிகப் பெரிய கல்வி நிறுவனமாகும். இந்த மாற்றத்திற்கு எதிராகவும் உள்ளூர்வாசிகள் போராட்டம் நடத்தினார்கள்.

நிலத்தடிக்கு கீழ் நிகழும் தீயானது இந்த கல்லூரியிலிருந்து வெகுதூரத்திற்கு அப்பால் மட்டுமே நடப்பதாகவும் மற்றும் அதை மேலும் பரவாமல் தடுக்கவியலும் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

இக்கல்லுரியானது நிலக்கரி பிரதானமாக இருக்கும் இடமென்பதாலேயே அதிகாரிகள் கல்லூரியை வேறிடத்திற்கு மாற்ற முயற்சிப்பதாக மக்கள் சந்தேகிக்கிறார்கள்.

டாக்டர் பி.கே. சிங், மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆய்வு மையத்தின் இயக்குனர்

உள்ளூர் அதிகாரிகளோ அல்லது நிலக்கரி நிறுவனமோ எப்போதும் அங்குள்ள மக்களை ஆலோசனை கேட்டு சென்றதில்லை என்று இந்திய நிலக்கரி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

“அதை நாங்கள்செய்திருக்கலாம். இதை நாங்கள் ECL என்னும் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட்டில் செய்திருக்கிறோம். ஆனால், அதிகாரிகள் அதுகுறித்து எங்களை அணுகவில்லை,” என்கிறார் சிங்.

“ஒருவேளை அவர்கள் எங்களை அணுகினால், தீயானது மற்றப் பகுதிகளை சென்றடைவதை நாம் தவிர்க்கலாம்.”

நிலம் பிளவுபடும் பகுதிகளில் “வாழ்வது அபாயகரமானது” என்பதை குறிக்கும் வகையில் பெரிய அளவிலான குறிப்புப் பலகைகளை அதிகாரிகள் அங்கு வைத்துள்ளார்கள்.

மேலும், அங்கு வசிக்கும் மக்களை வேறு ‘பாதுகாப்பான இடத்திற்கு’ செல்லுமாறு கூறும் குறிப்புப் பலகைகளையும் அதிகாரிகள் வைத்துள்ளார்கள்.

ஒரு குழந்தை புகைப் பறக்கும் சுரங்கத்தில் நிற்கிறது.

குறிப்பிட்ட சில அளவு மக்களை மட்டுமே மறுகுடியமர்த்தும் ஏற்பாடுகளை நிலக்கரி நிறுவனம் செய்துள்ள நிலையில் “மக்கள் எங்கு செல்வார்கள்”?. சரியான அடையாளம் உள்ளவர்கள் மட்டுமே இடம் மாற்றப்படுகிறார்கள்” என்று அங்குள்ள ஆசிரியரான பினாகி ராய் கூறுகிறார்.

“ஜஹாரியாவில் உள்ள மிகப் பெரிய பிரச்சனையே அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்குள்ள நிலக்கரி சுரங்கங்கள் அல்லது அது சார்ந்த வேலைகளை நம்பி வருமானம் ஈட்டுவதற்காக அங்கு இடம்பெயர்ந்து வருவதே ஆகும். அவர்களுக்கு எவ்விதமான அடையாளமும் இல்லை”.