‘நீட்’ தேர்வை கட்டாயம் ஆக்கியதன் மூலம், நாடு முழுவதும் பல ஆயிரம் ஏழை மாணவ – மாணவியரின் மருத்துவக் கல்வி கனவை, மத்திய பாஜக அரசு கலைத்தது.
மேல்நிலைக் கல்வித் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும்கூட, அந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பை பறித்தது.
இந்த சூழலில்தான், தமிழக மாணவிஅனிதா, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்களைப் பெற்றிருந்தும், எம்பிபிஎஸ் படிக்க முடிய வில்லை என்ற ஏக்கத்தில் மனமுடைந்த தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உச்சநீதிமன்றம் சென்று போராடியும் தனக்கு நீதி கிடைக்காத நிலையில், அவர் இந்த துயர முடிவை மேற்கொண்டார்.
நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியது. மாணவர்கள் பல நாட்களாக, பள்ளி, கல்லூரிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வால் ஒரு அனிதா இறந்தது, மட்டுமே உலகத்தின் பார்வைக்கு வந்தது.அனிதாவைப் போன்று கனவைப் பறிகொடுத்த மாணவியர் பலர், நடைபிணமான சோகம் முழுமையாக வெளியே வரவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வால் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்
என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மாணவி சம்யுக்தாவின் மரணம் நீட் தேர்வின் கோரத்தை வெளிக்காட்டியுள்ளது.பிளஸ் 2 தேர்வில் 95 சதவிகித மதிப் பெண்கள் பெற்றவர், மாணவி சம்யுக்தா.
இவரது தந்தை ஒரு கூலித்தொழிலாளி. தனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்கிற கனவின் காரணமாக, கஷ்டப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனியார் கோச்சிங் சென்டருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், பிளஸ் 2-வில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற சம்யுக்தாவுக்கு, கோச்சிங் சென்டரும் நீட் தேர்வுக்கான தயாரிப்பும் ஒரு சித்ரவதையாக மாறிவிட்டது.
கடன்வாங்கி படிக்க வைக்கும் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாமல்போய்விடுமோ என்ற அச்சம் ஆட்டிப் படைக்க துவங்கிவிட்டது.
விளைவு, சம்யுக்தா கடந்த திங்கட்கிழமை தனது வீட்டில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்னால் மருத்துவர் ஆக முடியுமா என்கிற பயம் அலைக்கழிக்கிறது;
அதனால் தான் இந்த முடிவு என்று சம்யுக்தா மிகத்தெளிவாக தனது பிரச்சனையை கடிதமாக எழுதிவைத்து விட்டு,
தனது வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார்.எப்படியாவது மருத்துவர் ஆகிவிடுவேன் என்று எனது மகள் சொல்வார்; அப்போதுதான் இந்த மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றும் கூறுவார்; கடந்த சில நாட்களாக இந்த கோச்சிங் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது;
இதுவரை படித்த பாடத்திட்டமும் இதுவும் வேறுவேறாக உள்ளது என்று நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார்; இன்று என் மகளை நான் இழந்து நிற்கிறேன் என்று சம்யுக்தாவின்தந்தை தற்போது கதறிக் கொண்டிருக்கிறார்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சம்யுக்தாவைப் போல கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
மாணவ – மாணவியர் மீது திணிக்கப்படும் நீட் தேர்வு அழுத்தம்தான் இதற்குக் காரணம் என்று குழந்தைகளுக்கான செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கான ஆகிய இந்த இரண்டு மாநிலங்களும் இப்போது தான் நீட் பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அஷ்யத ராவ் என்ற குழந்தைகள் செயற்பாட்டாளர்.