பெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.
பின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மலாலா யூசுப்சாய் போன்ற உருவம் கொண்ட ஒரு இளம் பெண், ஜீன்ஸ், ஹீல்ஸ் அணிந்து செல்வது போன்ற புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது.
மலாலா யூசுப்சாயின் புகைப்படம்தான் அது என எங்கும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் மலாலாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் கடந்த சில தினங்களாக முன்வைக்கப்பட்டன.
மலாலா யூசுப்சாய் ஒரு வெளிநாட்டு ஏஜெண்ட் எனவும், அவரை பாகிஸ்தானியர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சில பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், யூசுப்சாய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நுற்றுக்கணக்கான நெட்டிசன்கள், மலாலாவுக்கு தான் விரும்பிய உடையை அணிவதற்கான உரிமை உள்ளதாகவும் நோபல் பரிசு பெற்ற ஒருவரின் ஆடையை முன்வைத்து விமர்சனம் செய்தது வருத்தமளிப்பதாகவும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், புகைப்படத்தில் இருப்பது மலாலா இல்லை எனவும், அவர் நடிகை மியா கலிஃபா போன்று இருப்பதாகவும் ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
20 வயதான மலாலா யூசுப்சாய் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தத்துவம், அரசியல் பொருளாதரம் பயின்று வருகிறார்.
அண்மையில் மலாலா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.