சங்கானை தொட்டிலடிச்சந்தியில் போதைப்பொருள் பயன்படுத்தும் காவாலிகள் புதிதாக அமைக்கப்பட்ட காப்பெற் வீதியை அலங்கோலப்படுத்தி மக்களுக்கு தொல்லைகொடுத்துள்ளார்கள்.
வீதியைக்கடக்கும் வெள்ளைக்கோட்டுப்பகுதியில் தமது பெயர்களை வரைந்ததனால் பயணிகள் போக்குவரத்தின்போது தடுமாற்றமடைகிறார்கள்.
இவ்வாறு தனிப்பட்டவர்கள் அழிக்கமுடியாத வர்ணங்களை வீதியில் பயன்படுத்தி மக்களுக்கு இடையூறுவிளைவிப்பதற்கு இலங்கைச்சட்டத்தில் இடம்இருக்கிறதா?
காவல்துறை ஏன் காலிகள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை ? முறைப்பாடு கிடைக்கவில்லை என அவர்கள் சாக்குப்போக்கு சொல்வார்கள். அப்படியானால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையோ ,வீதி அபிவிருத்தி திணைக்களமோ , பிரதேச செயலகமோ ,அரச அதிபரோ ஏன் முறைப்பாடு கொடுக்கவில்லை? எங்களுக்கு சம்பளம் வந்தால்சரி மக்கள் எப்பாடுபட்டாலும்சரி என நினைக்கிறார்களா?
அத்துடன் நேற்றைய தீபாவளித்தினத்தன்றும் மதுபோதையில் ஏராளமான வன்முறைகள் நடந்துள்ளன இதில் முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரெழுவில் அரசியல் நோக்கத்திற்காக இரவு நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் மூன்று பாடசலைமாணவர்கள் கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓவ்வொருமாதமும் போயாதினத்திற்கும் பௌத்தமத பண்டிகைகளிற்கும் மூன்று தினங்கள் மதுச்சாலைகளை பூட்டும் அரசு தமிழர்களின் பண்டிகைகளுக்கு தாராளமாக திறந்துவிடுகிறது.
மத்தியமாகாண அரசின் தமிழ்ப்பிரதிநிதிகள் நேற்றையதினம் மதுச்சாலைகளை விசேட அனுமதிபெற்று மூடியிருந்தார்கள். ஆனால் நடக்காத ஒன்றான அரசியல்தீர்வை மட்டும்பேசி காலத்தை ஒட்டி அரசுடன் தேனிலவு கொண்டாடும் வடக்கு அரசியல்தலைமைகளால் மட்டும் அது முடியாமல்போனதோ அல்லது அவற்றை மூடிவிட்டால் குடித்துவிட்டு வீதியில் அட்டகாசம்செய்யும் காவாலிகளின் வாக்கு தமக்கு அடுத்ததேர்தலில் இல்லாமல்போய்விடுமோ என நினைத்தார்களோ தெரியவில்லை.
பண்டிகை நாட்களில்கூட சாதாரணமக்கள் வீதியில் அச்சமின்றி நடமாடமுடியாதா? ஏன மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.