அரசியல் கைதிகள் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராடப்போவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள இ;ன்றையதினம் யாழ் பல்கலைக்கழகத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் கூட்ட நிறைவில் வகுப்பு புறக்கணிப்பு தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (19) வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில் வகுப்பு புறக்கணிப்பு செய்வதாக தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ள வழக்கை மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்குத் மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி, குறித்த கோரிக்கைகள் நீதி மன்றத்துடன் தொடர்புபட்டவை என்பதால் இது தொடர்பில் சட்ட மா அதிபர் ஊடாக நீதிமன்றத்திற்கு விடயங்களை முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் ஜனாதிபதியின் வாக்குறுதியை துரித படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முதல் யாழ் பல்கலையின் அனைத்து பீடங்களினதும் மாணவ ஒன்றியங்கள் இணைந்து கால வரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு செய்வதாக தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றிய பிரதிநிதிகளுக்குமிடையிலே நடைபெற்ற சந்திப்பில் ஐனாதிபதி 25ம் திகதி வரை கால அவகாசம் கோரிய நிலையிலேயே இவ் வகுப்பு புறக்கணிப்பு இடம்பெறுகிறது.