புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் துரிதமாக செயற்பட்ட பொலிஸாருக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கு குறிப்பிட்ட சில பொலிஸார் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தனர்.
அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், கௌரவிக்கும் வகையிலும் இந்தப் பரிசுகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வுகள் கொழும்பு மேல்மாகாண சபை நுண்கலை கேந்திர நிலையத்தில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் அப்போதைய பணிப்பாளராக இருந்த சுதத் நாகஹமுல்ல, விசாரணைகளை நெறிப்படுத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பீ.ஏ.திசரா மற்றும் பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க உள்ளிட்ட 33 பொலிஸ் அதிகாரிகளுக்கு 13 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபா பணப் பரிசு பகிர்ந் து வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இதேபோன்று கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் பாதுகாப்பிற்கான மிக உயர்வான முறையில் பங்களிப்பு செய்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.