அனுராதபுரம் மாவட்டம் ஹெக்கிராவைப் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வாந்தி எடுத்த சம்பவம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவியை பாடசாலை நிர்வாகம் அவமானப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தெரியவருவதாவது; ஹெக்கிராவையிலுள்ள பாடசாலை ஒன்றில் பத்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் திடீரென வாந்தியெடுத்துள்ளார். இதனைக் கண்ணுற்ற பாடசாலை அதிபர் சந்தேகித்து பாடசாலையின் ஒழுக்காற்றுக் குழு ஊடாக குறித்த மாணவியை விசாரித்துள்ளார்.
விசாரணையின்போது மாணவி தான் காலைச் சாப்பாடு சாப்பிடாமல் வந்தமையினாலேயே அந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.எனினும் இதனை நம்ப மறுத்த நிர்வாகம் குறித்த மாணவி ஒழுக்கம் தவறியுள்ளார் என்றும், அவரை பாடசாலையிலிருந்து இடை நிறுத்தப்போவதாகவும் மாணவியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெற்றோர்இ குறித்த மாணவியை வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த பரிசோதனையில் மாணவி எவ்வித தாக்கத்துக்கும் உள்ளாகவில்லை என்பதும் காலைச் சாப்பாட்டைத் தவிர்த்ததனாலேயே வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரியவந்தது.
தமது பிள்ளை வீணான குற்றச் சாட்டினால் மனமுடைந்து உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவியின் பெற்றோர் மிகுந்த கவலையுடன் கூறியுள்ளனர்.
பிள்ளைகளின் ஒழுக்கத்தை மட்டுமன்றி உளவியலையும் இலகுவான முறையில் மாற்றியமைப்பதற்காகவே பாடசாலைகளில் ஒழுக்காற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு பிள்ளையின் உளவியலைச் சிதைத்து அவமானகரமான சூழ் நிலைக்கு குறித்த ஒழுக்காற்றுக்குழு கொண்டுசென்றுவிட்டுள்ளது என சமூக ஆர்வலர் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.