மாதவிடாயின் போது பெண்கள் தூய்மை இல்லாதவர்கள் என்று கருதி தீபாவளிப் பண்டிகையின் போது ஊரை விட்டு வெளியேற்றும் கொடுமையான வழக்கம் இன்றும் கர்நாடகா மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது. கர்நாடகாவின் சென்னா ஷெட்டி கொப்பா மற்றும் ஷிமோகா மாவட்டத்தின் சில கிராமங்களில் தீபாவளிப் பண்டிகையின் போது அவர்களின் குலதெய்வ வழிபாடு நடைபெறுகிறது.
இந்த காலகட்டத்தில் மாதவிடாய் ஏற்படும் பெண்கள் ஊரை விட்டு வெளியேற்றப்படுகின்றனர். அவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட பின்னர் கழுவி சுத்தம் செய்யப்படுகின்றனவாம்.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் மக்கள் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த போது 20 வயது சஞ்சனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மட்டும் தன்னுடைய குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடவில்லை. மாதவிலக்கு காரணமாக ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட அவர், தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இதற்கு முன்னர் தீபாவளிப் பண்டிகையின் போது மாதவிலக்கு ஏற்பட்டால் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குடிசையில் தங்க வைத்து வந்தனர். தற்போது தான் உறவினர்கள் வீடுகளில் தங்க அனுமதிக்கின்றனர் என்கிறார் சஞ்சனா.
மேலும் இதற்கு முன்னர் தூய்மைக் காலம் 15 நாட்கள் என்று இருந்தது, தற்போது ஏழு நாட்கள் மட்டும் கிராமத்தை விட்டு வெளியேறினால் போதும் என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த வழக்கம் குறித்து கூறும் அந்த கிராமத்து மூத்த குடி பெண்கள், “இந்த நடைமுறையை பின்பற்றாவிட்டால் தெய்வ குற்றத்திற்கு ஆளாகி கிராமங்களுக்கு பேராபத்து ஏற்படும்” என்று கூறுகின்றனர்.
கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இந்த வழக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில வருவாய் அமைச்சர் ககோடு திம்மப்பா “இப்போதும் இது மாதிரியான மூட நம்பிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. இது போன்ற பெண்களுக்கு எதிரான மத நம்பிக்கைகளில் இருந்து பாதுகாக்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாதவிடாயின் போது பெண்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் வழக்கத்திற்கு எதிரான மசோதா மீதான விவாதம் கர்நாடக சட்டசபையில் முடிந்துள்ளது. நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சட்டசபையில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.