புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தமது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனுவை முன்வைத்துள்ளனர்.
மரபணுப் பரிசோதனை அறிக்கையின் முடிவுக்கு மாறாக தமது கட்சிக்காரர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று மேன்முறையீட்டு மனுவில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேம சங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய சிறப்புத் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) விசாரணைகளை மேற்கொண்டது.
விசாரணைகளின் நிறைவில் கடந்த செப்ரெம்பர் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. கூட்டு வன்புணர்வு மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றங்களுக்கு 7 குற்றவாளிகளுக்கும் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. 2 பேர் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளுமே ஏகமனதாகத் தீர்மானித்திருந்தனர்.
இந்த நிலையில் 5 குறையாத நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன்னிலையிலேயே தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்ற சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு மனு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டி இறுதி நாள் இன்றாகும். கடந்த வாரமே மேன்முறையீட்டு மனு அறிக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது. சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் மற்றும் அவரது சகோதரர் மகாலிங்கம் சசிதரன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த் மற்றும் ஜெயதரன் கோகிலன் ஆகியோர் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தனவும் மேன்முறையீட்டு அறிவித்தலை முன்வைத்தனர்