முல்லைத்தீவில் ஏழு யுவதிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

இலங்கையின் வடக்கே முல்லைதீவு தண்ணீரூற்று பகுதியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஏழு திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. தண்ணீரூற்று ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலேயே குறித்த திருமணங்கள் இடம்பெற்றுள்ளன.

59e9ff0c8439e-IBCTAMILதிருமணம் முடிப்பதற்கு வசதியற்ற நிலையில் இருந்த யுவதிகளுக்கு இன்றைய தினம் ஒரே ஆலயத்தில் மேற்படி திருமணம் முடித்துக்கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.

அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் சைவ முன்னேற்ற சங்கத்தின் லண்டன் கிளை ஆகியவற்றின் ஏற்பாட்டிலேயே குறித்த திருமண நிகழ்வு இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இல்லறத்தில் இணைந்துகொண்ட தம்பதியினரை அகில இலங்கை இந்துமா மன்றத்தின் பிரதம குருக்கள் உள்ளிட்டோர் ஆசிர்வதித்துள்ளனர்.

குறித்த நிகழ்வானது சைவ முன்னேற்ற சங்கத்தினரின் 40ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வந்த ஏழு யுவதிகளின் வாழ்விற்கு நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளதாகவும் திருமணத்திற்கு வருகை தந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.