உலகத்திற்கு முன்னுதாரணமாக திகழும் மேற்குலக அரசியல் தலைவர்கள்!!

அரசியல்வாதிகள் பயணிக்கும் வாகனத்தொடரணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வீதியில் பயணிக்கும் பொதுமக்களும் வாகனங்களும் விலத்திச் செல்லுமாறு பணிக்கப்படுவது இலங்கையில் வழமையானதொரு விடயமாகும்.

அரசியல்வாதிகள் ஹெலிகொப்டரில் பயணிக்கின்ற சந்தர்ப்பங்களில் மாத்திரமே சாமானியர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை.

இதற்கு முற்றிலும் முரணாக, நெதர்லாந்துப் பிரதமர் மார்க் ரூட் சைக்கிளில் பயணித்து அரச அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்துள்ளார்.

வேறெந்தப் போக்குவரத்து சாதனங்களையும் விட மார்க் ரூட் சைக்கிளை விரும்பிப் பயன்படுத்தி வருகின்றார்.நெதர்லாந்து சென்றிருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கும் கூட மார்க் ரூட் சைக்கிள் ஒன்றை அண்மையில் பரிசளித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

நெதர்லாந்துப் பிரதமரிடம் சொகுசு வீடுகளும் இல்லை. 1992 இல் தனது சொந்த உழைப்பில் வாங்கிய தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் உள்ள வீட்டிலேயே இன்றும் வசித்து வருகின்றார்.

பிரதமரான பின்னரும் கூட நெதர்லாந்தின் கஷ்டப்பிரதேசமொன்றில் உள்ள பாடசாலைக்கு ஒவ்வொரு வாரமும் சென்று ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றார்.

உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அடையாளங்காணப்பட்டுள்ள நெதர்லாந்தில் மக்களை விட சைக்கிள்களே அதிகம் என கூறப்படுகிறது. அந்நாட்டின் சனத்தொகை 17 மில்லியன்களாகும்.

மார்க் ரூட் மாத்திரமல்ல இவ்வாறான தன்னலமற்ற தலைவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

உதாரணத்திற்கு மலாவியின் ஜனாதிபதி ஜோய்ஸ் பன்டா, உருகுவேயின் முன்னாள் ஜனாதிபதி ஜோஸ் பெப்பே முஜிக்கா ஆகியோரைக் கூறலாம்.

உருகுவே மக்கள் அவரை ‘பெப்பே’ என்றே அழைப்பது வழக்கம்.அவர் 5 வருட ஆட்சிக்காலத்தின் பின்னர், ஆட்சியைத் தொடர 60 வீத மக்கள் ஆதரவு இருந்தும் பதவியிலிருந்து விலகினார்.

ஜனாதிபதியாக இருந்த போது கூட ஜனாதிபதி மாளிகையில் வசிக்காத அவர், தொடர்ந்தும் அவரது மனைவியின் தோட்ட வீடொன்றிலேயே வாழ்ந்து வந்தார்.இரண்டு பேரை மட்டுமே தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்தார்.

2005 இல் உருகுவேயில் 39 வீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வந்தார்கள். பெப்பே முஜிக்காவின் தலைமைத்துவத்தை அடுத்து, அந்நாட்டின் வறுமைக்கோட்டு வீதம் 11 ஆகக் குறைந்தது.

இறுதிவரை அவர் தனது பழைய கார் ஒன்றிலேயே பயணித்து வந்தது இன்றும் பலருக்கு நினைவிருக்க வாய்ப்புண்டு.

இலங்கை அரசியல்வாதிகள் பலர் இவ்வாறான அரசியல் தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

 அவ்வாறானதொரு தலைவரைப் பெறும் நாளொன்றுக்காக இலங்கை மக்களும் காத்திருக்கின்றனர்.