என்னை காப்பாற்றுங்கள்! மைத்திரியிடம் மன்றாடிய கருணா!

இலங்கையில் அரசியல் தளத்தில் தற்போது அதிகம் பேசப்படும் விடயமாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) காணப்படுகிறார்.

கடந்த சில வருடங்களாக அரசியல் நடவடிக்கையிலிருந்து விலகியிருந்த கருணா, மீண்டும் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முயற்சித்து வருகிறார்.

150111180115_karuna_amman_512x288_afpஇந்நிலையில் மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவில் கருணா இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கருணா அண்மையில் சந்தித்தார்.

எனினும் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கருணா இணையவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரவின் வீட்டிற்கு கருணா சென்றுள்ளார்.

இதன்போது மஹிந்தவின் வீட்டிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பை ஏற்படுத்திய கருணா, நீண்ட நேரம் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பத்தரமுல்லையில அமைந்துள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இருந்து மஹிந்த அமரவீரவின் வீட்டிற்கு சென்ற கருணா, ஜனாதிபதியிடம் உரையாடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரை தொலைபேசி ஊடாக ஜனாதிபதியுடன் கருணா கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் தன்னால் எவ்வித நீதிமன்ற நடவடிக்கைகள் அல்லது குற்ற விசாரணை திணைக்களத்தினால் முன்னெடுக்கின்ற விசாரணைகளில் தலையிட முடியாதென ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரும் அவ்வாறு தலையிடமாட்டார் எனவும், அமைச்சர்களையும் அவ்வாறு தலையிடுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் ஜனாதிபதி, கருணாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது பசிலின் அழைப்பிற்கமைய தான் அவரது அலுவலகத்திற்கு சென்றதாகவும், நல்லாட்சி அரசுடன் ஒருபோதும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதியிடம், கருணா தொடர்ந்து கூறியுள்ளார்.

போர் நிறைவடைவதற்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற தனிப்பட்ட பல கொலை தொடர்பில் கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நாட்களில் கருணாவின் செயலாளர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக அந்த திணைக்களத்தின் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.