பனாஜி: கோவாவில் பாஜ மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் பாரிக்கர் உள்ளார். பாஜ கூட்டணியில் முக்கிய கட்சியாக கோவா முன்னேற்றக் கட்சி, மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி ஆகியவை உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாக மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி அறிவித்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று கோவா முன்னேற்றக் கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் விஜய்சர் தேசாய் கூறியதாவது: நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். எனவே, கோவாவில் உள்ள 2 நாடாளுமன்ற தொகுதியில் வரும் 2019 தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும், இந்த இடங்களில் பாஜ .வை ஆதரிப்பது என்றும் முடிவு எடுத்துள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக இருந்தால் முதலில் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டு போட்டியிட வேண்டும். நாங்கள் மாநிலத்தில் கட்சியை பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். 40 தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நவம்பர் 1 முதல் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.