புதுடெல்லி: பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவதால் பலர் தவறி விழுந்து விபத்தில் சிக்கி பலியாகி வருகின்றனர். இதை தவிர்க்க ஹெல்மெட் அணிவதை சில மாநிலங்கள் கட்டாயமாக்கி உள்ளன. இது தவிர, இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், கார்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக மத்திய அமைச்சர்கள் சிலர் விதிமீறலில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நிதின் கட்கரி ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் சென்று சர்ச்சையில் சிக்கினர். தற்போது, மாநில முதல்வர் ஒருவரே ஹெல்மெட் அணியாமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்கு முதல்வராக உள்ள ரகுபர் தாஸ் இரவு நேரத்தில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் ராஞ்சி நகரில் இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளார். அப்போது முதல்வர் உள்ளிட்ட யாரும் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது போன்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. போக்குவரத்து விதியை மீறி ஹெல்மெட் அணியாமல் முதல்வர் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.