இலங்கை இளைஞர்களின் மனிதாபிமானம்! போராடியும் உயிரிழந்த குரங்கு!

சேருவாவில பகுதியில் மரத்தில் இருந்து விழுந்த குரங்கு குட்டியின் உயிரை காப்பாற்ற போராடிய இளைஞர்கள் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அப்பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெற்ற பூஜை நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக சென்ற போதே இந்த குரங்கு குட்டியை இளைஞர்கள் சிலர் அவதானித்துள்ளனர்.

அந்த விகாரைக்கு அருகில் காணப்பட்ட மரத்தில் இருந்து விழுந்த குரங்கு குட்டி கடும் காயமடைந்து காணப்பட்டுள்ளது. காப்பாற்ற முடியாது, உயிரிழந்து விடும் எனக்கூறி பலர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளனர்.

மிகவும் வறுமையான கிராமம் என்பதனால் அங்கு கால்நடை வைத்தியர் ஒருவரை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 15 கிலோ மீற்றர் தூரம் காயமடைந்த குரங்கு குட்டியை தூக்கி சென்று இளைஞர் இறுதியாக இராணுவ முகாமிற்கு கொண்டு சென்ற போதிலும் அங்கும் அதனை காப்பாற்றுவதற்கான போதுமான வசதிகள் காணப்படவில்லை.

அதன் பின்னர் மருந்து வழங்கும் நிலையம் ஒன்றில் பணியாற்றிய நபர் ஒருவரின் உதவியுடன் குரங்கு குட்டிக்கு தையல் போட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் குரங்கு குட்டி உயிரிழந்துள்ளது. இறுதி வரை காப்பாற்ற போராடியமை குறித்து அந்த இளைஞர்களை பலர் பாராட்டியுள்ளனர்.