சைட்டம் நிறுவனம் தொடர்பாக அரசாங்கத்தின் இறுதித் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தனியார் மருத்துவக்கல்லூரியுடன் தொடர்புடைய சகல தரப்புகளும் நாளை 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதியால் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சைட்டம் தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரியவருகிறது. சைட்டம் நிறுவனம் தொடர்பாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட குழு இப்பேச்சுவார்த்தையின்போது ஜனாதிபதியிடம் தமது கருத்துகளை தெரிவிக்கவுள்ளதுடன் , அங்கு ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுடன் இறுதி முடிவும் எடுக்கப்படவுள்ளது.
சைட்டம் நிறுவனத்தின் முகாமைத்துவம் தொடர்பாக பிரச்சினைகள் இருப்பதால் அந்த நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவத்திடமிருந்து பொறுப்பேற்று அரச சார்பின்றி இலாபநோக்கற்ற பங்குதாரர்களைக்கொண்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட உயர் கல்வி நிறுவனமொன்றிடம் ஒன்றிணைக்க சிபாரிசு செய்யவுள்ளதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கும் மேலதிகமாக இந்த கல்வி நிறுவனத்தில் தரம் பேணப்படும்.
ஜனாதிபதி தலைமையிலான இப்பேச்சுவார்தையில் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவின் உறுப்பினர்களான சட்டமா அதிபர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்வர். மற்றும் சுகாதார அமைச்சர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.