களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஆறுபேர் காயமடைந்துள்ளதாகவும் விபத்துக்குள்ளான கார் முற்றாக சேதம் அடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி நீதிமன்றுக்கு முன்பாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நீர் கொழும்பில் இருந்து பாண்டிருபை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் நீதிமன்றுக்கு முன்பாக இருந்த வேப்பை மரத்துடன் மோதுண்டு மரத்தை விழுத்தி மின்கம்பத்துடன் மோதுண்டதனாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காகவே நீர் கொழும்பில் இருந்து வருகை தந்துள்ளனர். இதன்போது சாரதி அடங்கலாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி உட்பட மூன்று பிள்ளைகள் அடங்கலான ஆறு பேருமே இதன்போது காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் பொலிஸாரின் உதவியுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற் கொண்டுவருகின்றனர்.